இயேசு கிறிஸ்து ஏன் இவ்வளவு கொடுமையாக சாகவேண்டும்?
*இயேசு கிறிஸ்து ஏன் இவ்வளவு கொடுமையாக சாகவேண்டும்?*
இந்த கேள்வியை இறை வார்த்தை தெரிந்த எந்த கிறிஸ்தவரிடம் கேட்டாலும், _*"பாவிகளை மீட்க* கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார். இக்கூற்று உண்மையானது; எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது" (1 திமொத்தேயு 1:15),_ என்று சொல்வார். அந்த கூற்றை உறுதி செய்யும் சில வசனங்களை பார்ப்போம்.
_ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் *மீட்படைவீர்கள்"* (திருத்தூதர் பணிகள் 16:31)_
_"இயேசு ஆண்டவர்" என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் *மீட்புப் பெறுவீர்கள்.* (உரோமையர் 10:9)_ என்று திருத்தூதர் பவுல் இயேசு கிறிஸ்துவைப்பற்றி கூறினார்.
_இவராலேயன்றி (இயேசு) வேறு எவராலும் *மீட்பு இல்லை.* ஏனென்றால் நாம் *மீட்புப் பெறுமாறு* வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை(திருத்தூதர் 4:12)_
_அவரிடம் (இயேசுவிடம்) நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் *பாவமன்னிப்புப் பெறுவர்* (திருத்தூதர் 10:43)_ என்று திருத்தூதர் பேதுரு கூறினார்.
_அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் *பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.* (1யோவான் 1:7)_ என்று திருத்தூதர் யோவான் கூறியிருக்கிறார்".
திருமுழுக்கு யோவான், _"இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே (இயேசு) *உலகின் பாவத்தைப் போக்குபவர்.* (யோவான் 1:29)_ என்று சொன்னார்.
_மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் *பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்"* (மத்தேயு 20:28)_
_இது எனது (இயேசு) உடன்படிக்கையின் இரத்தம்; *பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.* (மத்தேயு 26:28)_
_"வழியும் உண்மையும் வாழ்வும் நானே. *என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை* (யோவான் 14:6)_ என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறினார்.
எனவே, மேற்கண்ட வசனங்கள் மூலம், *இயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் இரட்சிப்பு என்னும் புனிதமான நோக்கத்துக்காக* இவ்வுலகிற்கு மனித வடிவில் வந்து, இரத்தம் சிந்தி, தன் உயிரை கொடுத்திருக்கிறார் என்று உறுதியாக அறிகிறோம்.
இயேசு கிறிஸ்து மனிதனுக்கு பாவமன்னிப்பு கொடுப்பதற்காக தன் உயிரை கொடுத்தாரானால் பழைய உடன்படிக்கையில் வாழ்ந்தவர்களுக்கு இரட்சிப்பு உண்டா இல்லையா என்னும் கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவேண்டும்.
பழைய உடன்படிக்கையின் மக்களாகிய இஸ்ரயேலர்கள் பின்பற்றவேண்டும் என்று கடவுள் தன் தீர்க்கதரிசி மோசே மூலம் கொடுத்த திருச்சட்டத்தை ஒழுங்காக யார் கடைபிடித்தாலும் *நிலைவாழ்வை அடையமுடியும்* என்று வேதம் கூறுகிறது (ரோமர் 7:10). அதைத்தான் இயேசு கிறிஸ்துவும் உறுதி செய்கிறார். _திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் (இயேசுவை) சோதிக்கும் நோக்குடன், *"போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?"* என்று கேட்டார். அதற்கு இயேசு, "திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?" என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, *"உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக"* என்று எழுதியுள்ளது" என்றார். இயேசு, *"சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்"* என்றார் (லூக்கா 10:25-28)._
_*திருச்சட்டம் நல்லது என்பதை அறிந்திருக்கின்றோம். ஆனால், அதை முறைப்படி பயன்படுத்த வேண்டும் (1திமொத்தேயு 1:8)_* என்று பவுல் தெளிவுபடுத்துகிறார்.
ஆக திருச்சட்டத்தை ஒழுங்காக கடைபிடித்தால் *திருச்சட்டம் நிலைவாழ்வை தரும்* என்று அறிகிறோம்.
இப்போது, இயேசுவுக்கு முன் வாழ்ந்தவர்கள் திருச்சட்டத்தைமீறி பாவம் செய்தால், அவர்களுக்கு பாவமன்னிப்பு உண்டா? அல்லது பாவமன்னிப்பு பெறாமலேயே செத்துபோனார்களா? என்னும் கேள்வி எழுகிறது.
யூதர்களுக்கென்று கடவுள் கொடுத்த திருச்சட்டப்படி,
_அவர் *உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்;* உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார் (திருப்பாடல்கள் 103:3)_ என்று வாசிக்கிறோம்.
அது மட்டுமல்ல. _பாவம் போக்கும் பலிக்காளைக்குச் செய்ததுபோல, இந்தக் காளைக்கும் செய்து, குரு அவர்களுக்குப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார். அப்பொழுது *அவர்கள் மன்னிப்புப் பெறுவர்* (லேவியர் 4:20); அந்த நாளில் நீங்கள் *தூய்மையாக்கப்படும்படி உங்களுக்கெனப் பாவ பரிகாரம் நிறைவேற்றப்படும்;* ஆண்டவர் திருமுன் உங்கள் பாவங்களுக்காகக் பரிகாரம் நிறைவேற்றப்பட, நீங்கள் *தூய்மையடைவீர்கள்.* (லேவியர் 16:30)_
_உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன; எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும். இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன; எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும் (எசாயா 1:18)_
_நான், ஆம், நானே, உன் குற்றங்களை என்பொருட்டுத் துடைத்தழிக்கின்றேன்; உன் பாவங்களை நினைவிற் கொள்ள மாட்டேன் (எசாயா 43:25)_
_உன் குற்றங்களைக் கார்மேகம் போலும், உன் பாவங்களைப் பனிப்படலம் போலும் அகற்றிவிட்டேன். என்னிடம் திரும்பி வா, நான் உனக்கு மீட்பளித்துவிட்டேன் (எசாயா 44:22)_
என்னும் வசனங்களை வாசிக்கும்போது *பழைய உடன்படிக்கையிலேயே பாவமன்னிப்பு இருக்கிறது* என்று அறிகிறோம்.
அப்படியானால், _காளைகள், வெள்ளாட்டுக் கடாக்கள் இவற்றின் இரத்தம் *பாவங்களைப் போக்க முடியாது* (எபிரேயர் 10:4)_
_ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார். அவையோ *பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை.* (எபிரேயர் 10:11)_
என்று புதிய ஏற்பாடு சொல்வதன் அர்த்தம் என்ன? குழப்பமாக இருக்கிறது அல்லவா! இந்த கேள்விக்கான விடையை கீழ்காணும் வசனத்திலிருந்து அறியலாம்.
_இந்த மரணம் (கிறிஸ்துவின் மரணம்) *முந்திய உடன்படிக்கையை (பழைய உடன்படிக்கையை) மீறிச் செய்த குற்றங்களிலிருந்து மீட்பளிக்கிறது* (எபிரேயர் 9:15)_ என்று வேதம் தெளிவாக்குகிறது.
இதிலிருந்து பழைய உடன்படிக்கையில் வாழ்ந்தவர்கள் தங்கள் பாவமன்னிப்புக்காக விலங்குகளை பலியிட்டாலும் அவர்களுடைய பாவம் மன்னிக்கப்பட செலுத்தப்படவேண்டிய முழு விலையையும் இயேசுவின் மரணத்தின்மூலமே செலுத்தப்பட்டது என்று அறிகிறோம். ஆக, பழைய உடன்படிக்கையில் வாழ்ந்தவர்களுக்கும் புதிய உடன்படிக்கையில் வாழ்பவர்களுக்கும் மீட்பு கிறிஸ்துவின் மரணத்தின்மூலமே கிடைக்கிறது என்று தெளிவாக புரிந்துகொள்கிறோம்.
அப்படியானால், பழைய உடன்படிக்கையின்படி செலுத்தப்பட்ட *பலிகளால் பாவம் மன்னிக்கப்படும்* என்று பழைய ஏற்பாடு சொல்வதன் அர்த்தம் என்ன? பழைய ஏற்பாட்டு மக்கள் கடவுள் சொல்லியபடி பலியிட்டபோது, *அவர்களுடைய பார்வையில் அவர்களுடைய பாவங்கள்* மன்னிக்கப்பட்டன. ஆனால், அது *கடவுளின் பார்வையில்* முழுமையான பரிகாரமாக கடவுள் கணக்கில் எடுக்கவில்லை என்றுதான் நாம் கண்டுபிடிக்கமுடிகிறது.
முக்கால மக்களுடைய பாவங்களும் முழுமையாக மன்னிக்கப்பட இயேசுவின் மரணமாகிய *ஒற்றை பலியின்மூலம்* மொத்த உலகத்தின் கடவுள் சித்தம் கொண்ட காரணம் என்ன?
_கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, *ஒரேமுறை* தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். (எபிரேயர் 9:28)_
_இயேசு கிறிஸ்து *ஒரே ஒரு முறை* தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம். இவர் *ஒரே பலியைப்* பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்துள்ளார். (எபிரேயர் 10:10,12)_
பழைய உடன்படிக்கையின் மக்களுக்கும், புதிய உடன்படிக்கையின் மக்களுக்கும் பொதுவான ஆண்டவராகிய இயேசுவால்தான் உயிர்மீட்சியை உருவாக்கவேண்டும் என்று கடவுள் தீர்மானித்து அப்படி செய்தார். ஏனெனில் அனைவரும் இயேசுவால் படைக்கப்பட்ட ஆதாமின் சந்ததி அல்லவா!
பாவ மன்னிப்புக்காக ஒரு உயிரியை ஏன் கொலை செய்யவேண்டும்? இரத்தம் ஏன் சிந்தப்படவேண்டும்? கடவுளிடம் மனிதன், *"கடவுளே, எனக்கு ஒரு வீட்டைத் தாரும், வண்டியைத் தாரும், மனைவியைத் தாரும், பிள்ளைகளைத் தாரும், நல்ல வேலையைத் தாரும்..."* என்று தன் அன்றாட தேவைகளுக்காக வேண்டுவதுபோல பாவம் செய்த மனிதன் *"கடவுளே, என் பாவத்தை மன்னித்துவிடும்"* என்று பிரார்த்தனை செய்தால் கடவுள் மன்னிக்கமாட்டாரா என்று இஸ்லாமியர்கள் கேள்வி கேட்கின்றனர். இது ஒரு நல்ல கேள்விபோல் நமக்கு தெரியும். ஆனால்,
_"என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல; மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல *உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன."* (எசாயா 55:8, 9)_ என்று கடவுள் சொல்கிறார்.
கடவுள் எதை செய்தாலும் ஒரு நல்ல நோக்கத்தோடு தன் அனந்த ஞானத்தின் அடிப்படையில்தான் செய்வார். கடவுளை மனிதன் முழுமையாக புரிந்துகொள்ளமுடியாது என்பதே நிதர்சனமாக உண்மை.
மனிதன் தன்னுடைய கிட்டப் பார்வையோடு சிந்திக்கிறான். ஆனால், கடவுள் தொலைநோக்கு பார்வையோடு அனைத்தையும் செய்கிறார். கடவுள் முடிவை தொடக்கத்திலேயே அறிந்தவரல்லவா!
_*பின் நிகழவிருப்பதைத் தொடக்கத்திலே நான் அறிவித்தேன்; இனி நடப்பனவற்றை பண்டைக் காலத்திலேயே முன்னுரைத்தேன்; "என் திட்டம் நிலைத்திருக்கும்; என் விருப்பத்தை நிறைவேற்றுவேன்" (எசாயா 46:10)*_ என்று கடவுள் கூறுகிறார்.
தொலைபேசியை கண்டுபிடிப்பதற்கு முன், "இந்தியாவில் இருக்கும் ஒருவர் அமெரிக்காவில் இருக்கும் தன் நண்பரிடம் பேசமுடியும்" என்று யாராவது கூறினால் அதை நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. மாறாக ஏளனம் செய்வோம். ஆனால், தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டபின் அதை நம்புவோம். அதுபோலத்தான் நம் சிந்தனை எல்லைக்கு அப்பாற்பட்டு சிந்திப்பவர்தான் கடவுள்.
_இரத்தம் சிந்துதல் இன்றி *பாவமன்னிப்பு இல்லை* (எபிரேயர் 9:22)_ என்று வேதம் நம்மை அறிவுறுத்துகிறது.
பாவ மன்னிப்புக்கும் இரத்தம் சிந்துதலுக்கும் என்ன சம்பந்தம்? இரத்தத்தில் பாவத்தை மன்னிக்கும் வலிமையுடைய நுண்பொருள் என்ன இருக்கிறது?
_உடலின் *உயிர்* இரத்தத்தில் உள்ளது. அதனை நான் உங்களுக்காகப் பலிபீடத்தின்மேல் உங்கள் உயிருக்கெனப் *பாவப்பரிகாரம்* செய்யும்படி ஆணையிட்டேன். ஏனெனில், அது உயிருக்கான *பாவ பரிகாரம் நிறைவேற்றும் இரத்தம்* (லேவியர் 17:11)_ என்ற இறை வசனங்களிலிருந்து ஒரு உயிரியின் உயிர் அதன் இரத்தத்தில் இருக்கிறது என்றும் அந்த உயிரை பாவபரிகாரத்துக்காக கொடுக்கவேண்டும் என்றும் கண்டுபிடிக்கிறோம்.
இரத்தத்தில் இருக்கும் உயிருக்கும் பாவ மன்னிப்புக்கும் என்ன சம்பந்தம்? என்பது அடுத்த கேள்வியாகத் தொடர்கிறது.
இதை தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஆதாம் ஏவாள் என்னும் முதல் மனித தம்பதியரின் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்யவேண்டும்.
கடவுள் ஆதாமை மண்ணிலிருந்து படைத்தபின், _ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார். ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், "தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம். ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் *அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்"* என்று கட்டளையிட்டுச் சொன்னார் (தொடக்கநூல் 2:17)._
கடவுளின் கற்பனைகளுக்கு கீழ்படியாமையை *பாவம், குற்றம், மீறுதல், தவறு, அக்கிரமம்* என்று நாம் அழைக்கிறோம். ஒருவர் பாவம் செய்யும்போது அவர் பாவம் செய்தார் என்றுதான் நாம் நினைக்கிறோம். ஆனால், கடவுள் பாவத்தை *மரணம்* என்று அழைக்கிறார். கடவுளுடைய பார்வையில் பாவம் மரணத்துக்கு சமமாக இருக்கிறது. நம் பார்வையில் பாவம் சாதாரணமாக தோன்றினாலும் பாவத்தால் எவ்வளவு பெரிய பாதிப்பு வருகிறது என்பது கடவுளுக்குத்தான் முழுமையாக தெரியும். *ஆன்மீக உயிரை* இழப்பதுதான் மிகப்பெரிய இழப்பு.
ஆனால், ஆதாமின் மனைவியாகிய ஏவாளை சாத்தான் ஏமாற்றி அந்த பழத்தை உண்ண வைத்தான். அவள் அதை உண்டபின் ஆதாமுக்கும் கொடுத்தாள்.
அந்த விலக்கப்பட்ட கனியை *உண்ணும் நாளிலே சாகவே சாவாய்* என்று கடவுள் சொன்னபடி நடந்ததா? ஆம்; ஆதாமும் ஏவாளும் அதே நாளில் செத்தார்கள். அப்படியானால், _மொத்தம் *தொள்ளாயிரத்து முப்பது ஆண்டுகள்* வாழ்ந்தபின் ஆதாம் இறந்தான் (தொடக்கநூல் 5:5)_ என்று திருமறை சொல்கிறதே! ஆம். ஆதாமும் ஏவாளும் விலக்கப்பட்ட கனியை உட்கொண்டவுடன் உடலளவில் சாகவில்லை. *ஆன்மாவில் இறந்துவிட்டனர்.* அதாவது, கடவுளுக்கும் அவர்களுக்கும் இருந்த களங்கமில்லாத உறவு துண்டிக்கப்பட்டது. அதைத்தான் திருத்தூதர் பவுல், _பாவத்தின் சம்பளம் *மரணம்* (ரோமர் 6:23)_ என்று நமக்கு கற்றுத் தருகிறார்.
_பாவம் செய்யும் *ஆத்துமா சாகும்* (எசேக்கியேல் 18:20)_ என்று ஆண்டவர் கூறுகிறார்.
ஒரு சூழ்நிலையில் _இயேசு தன் சீடர் ஒருவரைப் பார்த்து, *"மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும்,* நீ என்னைப் பின்பற்றி வா" என்றார் (மத்தேயு 8:22)._ இறந்தவர் எப்படி இறந்தவரை அடக்கம் பண்ணமுடியும்? அங்கே *ஆன்மீக மரணமடைந்தவர்கள் உடலியல் மரணம் அடைந்தவரை அடக்கம் செய்யட்டும்* என்று கிறிஸ்து குறிப்பிடுகிறார்.
அதை பவுல் எபேசு சபைக்கு எழுதும்போது, _உங்களுடைய குற்றங்களையும் பாவங்களையும் முன்னிட்டு நீங்கள் *இறந்தவர்களாய் இருந்தீர்கள்.* குற்றங்களின் காரணமாய் *இறந்தவர்களாயிருந்த* நாம் அவ்வன்பின் மூலம் இணைந்து உயிர் பெறச் செய்தார் (எபேசியர் 2:1,5)_ என்கிறார்.
உடலளவில் உயிரோடு இருக்கும் மக்கள் ஆன்மாவில் இறந்தவர்களாக இருந்ததால்தான் பவுல் அப்படி எழுதுகிறார்.
ஒரு கறுப்பு நிறமுடைய தந்தைக்கும், ஒரு கறுப்பு நிறமுடைய தாய்க்கும் பிறந்த குழந்தை கறுப்பு நிறத்தோடு இருப்பதுபோல, பாவம் செய்த ஆதாமுக்கும் பாவம் செய்த ஏவாளுக்கும் பாவத்தோடு பிள்ளைகள் பிறந்தார்கள். அதை பவுல் விளக்கும்போது,
_ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, *எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது* (ரோமர் 5:12)._
என்ற வசனங்களின்படி ஆதாம் செய்த பாவத்தால் இவ்வுலக மனிதர் அனைவருக்குள்ளும் பாவம் தொற்றுநோயைப்போல பற்றிக்கொண்டது. அதனால்தான் தாவீது, _"இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; *பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள்* (திருப்பாடல்கள் 51:5)_ என்று அறிக்கையிடுகிறார். பாவத்தோடு பிறந்த மனிதனை சாத்தான் பாவம் செய்யவைத்து மரணத்துக்கு உள்ளாக்குகிறான்.
மனிதனுடைய நிலையை முழுவதுமாக தெரிந்த கடவுள் மனிதன் ஏதேன் தோட்டத்தில் ஆன்மீக மரணமடைந்து இழந்த உயிரை ஆதாமுடைய சந்ததியார் அனைவரும் முழுமையாக பெற்று உயிரடைய சித்தம் கொண்டார். அதற்கு மொத்த உலக மக்களும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில், மொத்த உலகத்துக்கும் பொதுவான ஒரு உயிரியின் இரத்தத்துக்குள் இருக்கும் உயிர் தேவைப்பட்டது. மொத்த உலகத்துக்கும் பொதுவான உயிர் கடவுள்தான். ஆனால், ஆவியாக இருக்கும் கடவுளை யாரும் கொலை செய்யமுடியாது. ஆவிக்கு ஊனுடலும், இரத்தமும் இல்லை. எனவே, கடவுளே மனிதவடிவில் இறங்கிவந்து பலியாகவேண்டும் என்று அவர் தீர்மானித்து *கடவுளின் முழு மாட்சிமையை தாங்கிய* கடவுளின் வார்த்தையை *இயேசு* என்று பெயரிட்டு மனித வடிவில் இந்த உலகுக்கு அனுப்பினார்.
இயேசுவின் உயிர் இயேசுவின் இரத்தத்தில் இருந்தது. இயேசு அவருடைய இரத்தம் *முழுவதையும்* கல்வாரி சிலுவையில் மனிதனுக்காக சிந்தி, ஆன்மீக மரணமடைந்த மனிதனை உயிர்ப்பிக்க தன் உயிரைக் கொடுத்தார்.
_ஒரு மனிதர் (ஆதாம்) வழியாகச் சாவு வந்ததுபோல *ஒரு மனிதர் (இயேசு) வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர்* (1கொரிந்தியர் 15:21)_ என்று திருத்தூதர் பவுல் பதிவு செய்கிறார்.
ஆனால், மனுக்குலத்தின் பாவமன்னிப்புக்கு இயேசு கிறிஸ்துவின் உயிர் மட்டும்தான் கடவுளுக்கு தேவைப்பட்டிருக்குமானால் இயேசு இரத்தம் சிந்தாமலேயே அதை சாதித்திருக்கலாமே! அவரது உடலில் எந்த காயமும் ஏற்படாமலேயே, அவர் சிலுவையில் அறையப்பட்டு பாடுபடாமலேயே தன் உயிரை தந்தையிடம் ஒப்புக்கொடுத்திருக்கலாமே!
இயேசு கிறிஸ்து ஒரு கட்டிலில் படுத்திருக்க, 6 திருத்தூதர்களை கட்டிலின் ஒருபுறம் நிறுத்தி, மற்ற 6 திருத்தூதர்களை கட்டிலின் மறுபுறம் நிறுத்தி தன் தாயை தன் பாதத்தின் அருகில் நிற்கச்சொல்லி, _"என் தாயே! என் சகோதரர்களே! நான் என் தந்தையிடம் செல்லும் நேரம் வந்துவிட்டது. உலக மக்களின் மீட்புக்காக என் ஆவியை விலையாக ஒப்புக் கொடுக்கவேண்டும் என்று என் தந்தை எனக்கு கட்டளையிட்டிருக்கிறார். என் ஆவி என் உடலைவிட்டு பிரிந்தபின் என் உடலை நல்லடக்கம் செய்துவிடுங்கள்; நான் மூன்றாம் நாளில் உயிரோடு எழும்புவேன்; கவலைப்படவேண்டாம்"_ என்று சொல்லி கண்ணை மூடியிருக்கலாமே! அந்த மரணம் மிகவும் *கண்ணியமாக* இருந்திருக்குமே! மக்களும் விடுவிக்கப்பட்டிருப்பார்கள். யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுத்து *தற்கொலை செய்யவேண்டிய தேவையும் இல்லையே!*
_"தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை *என்னிடமிருந்து அகற்றும்.* ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்" (லூக்கா 22:42)_ என்றும், _என் இறைவா! என் இறைவா! *ஏன் என்னை கைவிட்டீர்?"* மத்தேயு 27:46)_ என்றும் கூறியிருக்கவேண்டிய தேவை இல்லையே!
*_"அண்ணே, உங்க கடவுளையே கொன்னுட்டாய்ங்க! உங்களை விடுவாய்ங்களா? பாத்துக்கோங்கண்ணே! மண்டை பத்திரம்!"_* என்று பிறர் நம்மைப் பார்த்து நையாண்டி செய்யும் நிலை வந்திருக்காதே! *"எங்கள் இயேசுவை எந்த கொம்பனாலும் அசைக்கமுடியாது"* என்று பெருமையாக நெஞ்சை நிமிர்த்தி நாம் பரப்புரை செய்திருக்கலாமே!
இயேசு கிறிஸ்து சிலுவையில் கொடிய வலியை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது _அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, *"கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, உன்னையே விடுவித்துக்கொள். நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா"* என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும் மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர். அவர்கள், *"பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். "நான் இறைமகன்" என்றானே!"* என்று கூறினார்கள். அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள் (மத்தேயு 27:39-44)._
அகிலாண்டத்தை படைத்த பரமாத்மா நினைத்திருந்தால் சிலுவைக்கு போகாமலேயே தப்பித்திருக்கலாமே! _"நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா!"_ என்று அவரிடம் மக்கள் சொல்லும்போது அவர் இறங்கி வந்திருக்கலாமே! லாசருவை உயிரோடு எழுப்பியவருக்கு அது கடினமான காரியமா?
அவர் இவ்வளவு கொடுமைப்படுத்தப்பட்டு, தனக்காக வாதாட யாருமே இல்லாமல், தன்மானத்தை துறந்து, அசிங்கமாக அவமானப்பட்டு செத்தால்தான் சாதிக்கமுடியும் என்ற விஷயம் என்ன? ஒழுக்கத்தின் உச்சத்தில் வாழ்ந்த புருஷோத்தமனை கைது செய்து, இழிவுபடுத்தி, பரிகாச வார்த்தைகளால் ஏளனம் செய்து, அநியாயமாக சாட்டையால் அடித்து, முகத்தில் துப்பி, இரக்கமில்லாமல் கன்னத்தில் அறைந்து, முள்முடிசூட்டி, சிலுவையில் அறைந்து கொல்லும் அளவுக்கு கடவுள் தன் பாசத்துக்குரிய மகனை ஏன் விட்டுக் கொடுக்கவேண்டும்? உலகைப் படைத்த இறைமகன் ஏன் ஒரு வலிமையற்ற அடிமையைப்போல இப்படி துன்பப்படவேண்டும்?
இவ்வளவு அவமானத்தையும் இயேசு கிறிஸ்து சுமந்தால்தான் சாதிக்கமுடியும் என்ற விஷயம் ஏதோ ஒன்று இருந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் கடவுள் இப்படி ஒரு கோர மரணத்தை தன் பாசத்துக்குரிய மகனுக்கு அனுமதித்திருக்கமாட்டார். ஒரு தாய் தன் சொந்த மகன் கொலைக் குற்றவாளியாகவே இருந்தாலும் அவனுடைய மரணத்தை சம்மதிக்கமாட்டார். அவ்வளவுதூரம் அவர் தன் மகனை நேசிப்பார். அப்படியிருக்க, ஒரு குற்றம்கூட செய்யாத தன் பரிசுத்த பிள்ளையை, ஒரு பச்சை நிரபராதியை கடவுள் ஏன் இப்படிப்பட்ட அவமான மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்? அதன்மூலம் கடவுள் சாதித்தது என்ற விளக்கத்தை இதோ பார்ப்போம். இதை கவனமாக வாசியுங்கள்.
_நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு *கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை புரிந்துகொள்ளச் செய்துள்ளார்* (உரோமையர் 5:8)_
_நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் *கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது.* நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் பரிகாரமாக அனுப்பினார் என்பதில்தான் *அன்பின் தன்மை விளங்குகிறது* (1யோவான் 4:9,10)_
மேற்கண்ட வசனங்களின்படி பாவிகளாக இருந்த நமக்காக இயேசு கிறிஸ்து தன் உயிரை தியாகம் செய்ததால் கடவுள் நம்மீது வைத்திருக்கும் தெய்வீக அன்பை நமக்கு விளங்கப்பண்ணியிருக்கிறார் என்று அறிகிறோம். அதாவது அன்பு என்னும் வார்த்தையின் உண்மையான இலக்கணத்தை மனிதன் புரிந்துகொள்ளும்படி செய்துள்ளார் என்று அறிகிறோம்.
பழைய உடன்படிக்கையின் நாட்களிலும் கடவுள் அன்புள்ளவராகத்தான் இருந்தார். அவர் _அநாதி சிநேகம் (எரேமியா 31:3)_ உடையவரல்லவா! ஆனால், *குற்றம் செய்த இஸ்ரயேலருக்கு கடவுள் கொடுத்த கடுமையான தண்டனைகளால்* கடவுள் பேரன்புள்ளவர் என்னும் உண்மையை மக்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆனால், *மனிதன் செய்த பாவங்களுக்காக கடவுளின் மகன் மனித வடிவில் இறங்கி வந்து தன் உயிரை கொடுத்தபோதுதான் கடவுள் எவ்வளவு அன்புள்ளவர் என்பதை மக்களால் புரிந்துகொள்ளமுடிந்தது.*
கடவுள் மனிதன்மீது வைத்திருக்கும் அன்பை ஏன் விளங்கப்பண்ணவேண்டும்? என்பதை நாம் ஆராய்ச்சி செய்தால் ஒரு முக்கியமான உண்மை வெளிப்படுகிறது.
_அவரே (இயேசு) முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் *நாமும் அவரிடம் அன்பு செலுத்துகிறோம்* (1யோவான் 4:19)_
பாவங்களாலும், அவற்றால் உருவான சாபங்களாலும் நரகத்திலே அழிந்துபோகவேண்டிய நமக்காக இறைவன் தன் பாசக் குமாரசுவாமியை இவ்வுலகுக்கு அனுப்பி, நாம் அடையவேண்டிய தண்டனையை அவருக்கு கொடுத்து, அவருடைய உயிரை நமக்காக விட்டுக் கொடுத்ததன் நோக்கம் என்ன? கடவுள் மனிதன்மீது உயிரையே வைத்து நேசிக்கிறார் என்று மனிதனுக்கு தெரிந்தால்தான், அவருடைய அன்புக்கு ஈடாக நன்றி உணர்வோடு மனிதன் கடவுளை நேசிக்கமுடியும் என்று கடவுள் திட்டமிட்டார். எதை வேண்டுமானாலும் சட்டத்தை வைத்து சாதித்துவிடலாம். ஆனால், அன்பை பெற்றுக்கொள்வதற்கு மட்டும் அன்பை கொடுத்தால்தான் முடியும்.
மனிதன் கடவுளை நேசிப்பது எப்படி? அவரை பார்த்து புன்சிரித்து அவருக்கு முத்தம் கொடுக்கமுடியுமா? அவர் ஆவி வடிவத்தில் வாழ்பவர் அல்லவா? அப்படியானால் நாம் கடவுளை எப்படி நேசிக்கமுடியும்? அதை இயேசு கிறிஸ்துவே கூறியிருக்கிறார்.
_"என்மீது அன்பு கொண்டுள்ளவர் *நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார்,* என்மீது அன்பு கொண்டிராதவர் *நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை.* (யோவான் 14:23,24)_
இந்த வசனங்களிலிருந்து, இயேசு கிறிஸ்துவிடம் அன்பு கூர்வதன் உட்பொருள் *அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்படிவதுதான்* என்று புரிந்துகொள்கிறோம். அதாவது, இயேசுவை நேசிப்பவர்கள்தான் இயேசுவின் கற்பனைக்கு கீழ்படியமுடியும்; மற்றவர்களால் முடியாது என்று சொல்கிறார்.
கிறிஸ்துவின் போதனைகளின் சாராம்சம் என்ன? நாம் எதை கீழ்படியவேண்டும் என்று இயேசு முக்கியப்படுத்துகிறார் என்று பார்ப்போம்.
_*நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல* நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை (யோவான் 15:12)_
_ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். *நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல* நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்னும் *புதிய கட்டளையை* நான் உங்களுக்குக் கொடுக்கிறேன் (யோவான் 13:34)_ என்று இயேசு கிறிஸ்து போதிக்கிறார்.
அதாவது, *இயேசு கிறிஸ்து நம்மேல் வைத்திருந்த தெய்வீக அன்போடு* நாமும் பிறரை நேசிக்கவேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார்.
திருத்தூதர்களும் இதையே உறுதிப்படுத்துகிறார்கள்.
_கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் *அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம்.* ஆகவே *நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்* (1யோவான் 3:16)_
_அன்பார்ந்தவர்களே, கடவுள் இவ்வாறு நம்மீது அன்பு கொண்டார் என்றால், *நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்* (1யோவான் 4:11)_ என்று யோவான் தெளிவாக்குகிறார்.
_*கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள் (எபேசியர் 5:2)*_ என்று பவுல் உறுதிப்படுத்துகிறார்.
ஆக, *கிறிஸ்து நம்மில் அன்பு கூர்ந்ததுபோல நாமும் பிறரிடம் அன்பு கூரவேண்டும்* என்பதற்காகவே கிறிஸ்து இவ்வளவு கொடிய மரணத்தை அடைந்தார் என்று மேற்கண்ட வசனங்களிலிருந்து தெளிவாக அறிகிறோம். அன்பு செய்வதே கிறிஸ்தவர்களுக்கு தலையாய கடமையாக கடவுளால் போதிக்கப்பட்டுள்ளது.
புனிதநூலின் மேற்கண்ட வசனங்கள் மிக உயர்வான ஒரு வாழ்வியல் போதனையை நமக்கு கற்றுத்தருகிறது. இயேசு தன் உயிரையே கொடுக்குமளவுக்கு நம்மை நேசித்ததுபோல நாமும் பிறரை நேசிக்கவேண்டும். இதுவே இயேசு இன்று ஒவ்வொரு கிறிஸ்தவர்களிடமும் எதிர்பார்க்கிறார்.
*இயேசு நம்மை நேசிப்பதுபோல நாம் பிறரை நேசிப்போமானால், இயேசு கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல நாமும் பிறரை ஏற்றுக்கொள்வோம்* அல்லவா!
_*கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல* நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள் (உரோமையர் 15:7)_ என்று திருத்தூதர் பவுல் விளக்கி சொல்கிறார்.
இயேசு கிறிஸ்து நம்மை தெய்வீக அன்போடு ஏற்றுக்கொண்டதுபோல நாமும் சக விசுவாசிகளை ஏற்றுக்கொண்டால், அவர்களை கீழ்சாதி என்றோ, அந்நிய சாதி என்றோ புறக்கணிக்கமுடியாது.
இஸ்ரவேலரும், இஸ்ரவேலர் அல்லாதவர்களும் தலைமுறைகளாக கடுத்த பகையோடு வாழ்ந்தவர்கள். அவர்கள் இருதரப்பினரையும் இணைப்பதற்காக இயேசு கிறிஸ்து தன் உடலில் துன்பங்களை சகித்தார் என்றும் வேதம் சுட்டிக்காட்டுகிறது.
_*இயேசுவே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் (இஸ்ரயேலர்- புறவினத்தார்) பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார். பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார். இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் புதியதொரு மனித இனமாகப் படைத்து அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார். தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார் (எபேசியர் 2:14-16).*_
யூதர்கள் பிறஇன மக்களுடன் நட்புறவோடு வாழ்வதை நம்மால் கற்பனை செய்தே பார்க்கமுடியாது. அவர்கள் பிரிந்து கிடந்ததற்கு கடவுளும் ஒரு வகையில் காரணமாக இருந்தார். அந்த விளக்கங்களை ஏற்கெனவே விளக்கமாக சொல்லியிருக்கிறேன். அப்படி இருந்த தலைமுறை பகையிலிருந்து அவர்களை மீட்டு ஒன்றாக்க இயேசு கிறிஸ்துவின் மரணத்தை கடவுள் பயன்படுத்தினார்.
இயேசு கிறிஸ்து இவ்வளவு கொடுமைப்படுத்தப்பட்டு இறந்தால்தான் சாதிக்கமுடியும் என்ற மற்றொரு கருத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
_வாழ்வோர் இனி *தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழவேண்டும்* என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார் (2கொரிந்தியர் 5:15)*_
_நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் *கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள்* (1கொரிந்தியர் 10:31)_
அதாவது, கடவுளால் எனக்கு என்ன கிடைக்கும், என் குடும்பத்துக்கு என்ன கிடைக்கும் என்று லாப நோக்கத்தோடு வாழாமல், எனக்காக உயிரையே கொடுத்த அந்த கருணாமூர்த்திக்கு என் வாழ்வின் மூலமாக என்ன கிடைக்கும் என்ற ஆதங்கத்தோடு வாழவேண்டும் என்பதற்காக அவர் இப்படி இறந்தார் என்று அறிகிறோம். அதாவது நம்முடைய பெயர் புகழ்ச்சிக்காக வாழாமல் கடவுளின் புகழ்ச்சிக்காக நாம் வாழ்வதற்காக இயேசு கிறிஸ்து இப்படிப்பட்ட வலிமிகுந்த ஒரு மரணத்தை அனுபவித்தார் என்று அறிகிறோம்.
இயேசு கிறிஸ்துவுக்கென்று வாழ்கிறவர்கள் அவருடைய உயர்ந்த இலட்சியங்களுக்கென்று வாழவேண்டும். அவருடைய தொலைநோக்கு தரிசனம் நமது ஆதங்கமாக மாறவேண்டும். அவர் எந்த நோக்கத்தோடு தந்தையால் அனுப்பப்பட்டாரோ அந்த நோக்கத்தோடு இணைந்து நாம் வாழத்தொடங்கவேண்டும் என்று அவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார். அவருடைய இலட்சியம் என்ன?
_*எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும்* வேண்டுமென அவர் விரும்புகிறார் (1 திமொத்தேயு 2:4);_
_*பாவிகளை மீட்க* கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார் (1 திமொத்தேயு 1:15)_
பாவிகள் மீட்கப்படவேண்டும் என்பதுதான் இயேசுவின் பிரதான நோக்கம் என்பதை மேற்கண்ட இறை வார்த்தைகள்மூலம் அறிகிறோம்.
ஆக, இயேசு இந்த மண்ணுக்கு வந்த நோக்கத்தோடுதான் நாம் வாழ்வோமானால், பாவிகள் மீட்கப்படவேண்டும் என்னும் நோக்கத்தோடுதான் நாமும் வாழ எதிர்பார்க்கப்படுகிறோம். பாவிகள் மீட்கப்படவேண்டுமானால், கிறிஸ்துவின் நற்செய்தியை நாம் அவர்களுக்கு பறைசாற்றவேண்டும். அந்த பிரசங்கத்தை அவர்கள் செவிகொடுத்து கேட்டு அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். நமது கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமானால், அவர்கள் முதலில் நம்மை ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ளவேண்டுமானால் *நாம் அவர்களை சாதி, மத, இன, மொழி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள் ஏதும் இல்லாமல் களங்கமில்லாத அன்போடு ஏற்றுக்கொள்ளவேண்டும்.* வெறுமெனே _'எங்கள் மதத்தில் அதிகம் பேர் இருக்கிறார்கள்'_ என்று பெருமைப்படுவதற்காக
மதமாற்றம் செய்தால் அவர்கள் நம்மை *மதவெறிபிடித்த நடிகர்கள்* என்று கண்டுபிடித்து வெறுத்துவிடுவார்கள். அவர்கள் நம்மை வெறுத்தபின், _"ஆண்டவரே, எங்கள் தேசத்தை இரட்சியும்!"_ என்று கூப்பாடு போடுவதில் அர்த்தம் இல்லை.
ஆக, நமக்குள் கடவுளின் அன்பை ஊட்டுவதற்காகத்தான் இயேசு இவ்வளவு கொடுமையான மரணத்தை அடைந்திருக்கிறார் என்பதை இந்த அத்தியாயத்தின்மூலம் நாம் அறிகிறோம்.
(*'சாதியமே கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடை'* என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரை).

Comments
Post a Comment