சாதியமே கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடை!

*ஆபிரகாம் சாதி பார்த்தாரா?*

சாதி உணர்வுடைய 'கிறிஸ்தவ போதகர்கள்' பலர் தங்கள் சாதிவக்கிரப் பண்பாட்டை நியாயப்படுத்த, *"ஆபிரகாம், ஈசாக்கு போன்ற இறைபக்தர்கள் சாதி வேறுபாட்டுக் கொள்கையோடுதான் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்திருக்கின்றனர்"* என்று போதித்துக்கொண்டிருக்கிறார்கள். கல்வியறிவுடைய சபை மக்கள்கூட அதை இறைவார்த்தையோடு ஆராயாமல் அப்படியே கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். அவர்களுடைய இந்த சமூகவிரோதக் கருத்தை உண்மையா பொய்யா என்று ஆராயவேண்டும் அல்லவா! இல்லாவிட்டால் கிறிஸ்தவத்துக்குள் இன்று காணப்படும் எல்லா சாதிச் சண்டைகளுக்கும் ஆபிரகாம், ஈசாக்கு என்னும் ஆன்மீகவாதிகளே காரணம் என்றாகிவிடும். கடைசியில் சமத்துவ சமூகத்தை தேடும் மக்கள் இயேசு கிறிஸ்துவிடம் வைத்திருக்கும் அபிமானமும் அழிந்துவிடும்.

ஆபிரகாம் தன் வேலைக்காரன் எலியேசரை அனுப்பி தன் மகன் ஈசாக்குக்கு பெண் தேடிய சம்பவத்துக்கு வருவோம்.

_ஆபிரகாம் தம் வீட்டின் வேலைக்காரர்களில் மூத்தவரும், தமக்குரிய அனைத்திற்கும் அதிகாரியுமானவரை (எலியேசர்) நோக்கி, "விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணையிட்டுச் சொல்; நான் வாழ்ந்துவரும் இந்த கானான் நாட்டுப் பெண்களிடையே என் மகனுக்குப் பெண்கொள்ளமாட்டாய் என்றும், சொந்த நாட்டிற்குப் போய், *என் உறவினரிடம் என் மகன் ஈசாக்குக்கு பெண்கொள்வாய்* என்றும் சொல்" என்றார் (தொடக்க நூல் 24:3,4)_

அதுபோல, ஈசாக்கு தன் மகன் யாக்கோபிடம் யாரைத் திருமணம் செய்யவேண்டும் என்று கூறுகிறார் என்று பார்ப்போம்.

_ஈசாக்கு யாக்கோபை அழைத்து அவனுக்கு ஆசி வழங்கி கட்டளையிட்டுக் கூறியது: "நீ கானானியப் புதல்வியருள் எவளையும் மணந்து கொள்ளாதே. புறப்பட்டு, பதான் அராமுக்குப்போய், *உன் தாயின் தந்தையாகிய பெத்துவேல் வீட்டிற்குச் செல். அங்கு உன் தாய்மாமன் லாபான் புதல்வியருள் ஒருத்தியை மணந்துகொள்"* (தொடக்க நூல் 28:1,2)._

இஸ்ரவேலர் அல்லாத வேறு இனப்பெண்களை திருமணம் செய்யக்கூடாது என்று தீர்க்கதரிசி எஸ்ராவும், நெகேமியாவும் அறிவுறுத்துகிறார்கள்.
_குரு எஸ்ரா எழுந்து அவர்களைப் பார்த்துக் கூறியது: *"நீங்கள் வேற்றினப் பெண்களை மணந்ததால் நேர்மையற்றவர்களாகி, இஸ்ரயேலின் பாவத்தைப் பெருகச் செய்துள்ளீர்கள்.* எனவே, இப்பொழுது உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரின் திருமுன் மன்றாடுங்கள்; அவர் திருவுளப்படி நடங்கள்; இந்நாட்டில் வாழும் மக்களிடமிருந்தும், *வேற்றினப் பெண்களிடமிருந்தும் விலகி இருங்கள்"* (எஸ்ரா 10:10,11)_

_*வேற்றினப் பெண்களை மணந்து கடவுளுக்கு எதிராக இப்பெரும் தீமை அனைத்தையும் நீங்கள் செய்து வருவதைப்போல்* நாங்களும் செய்ய வேண்டுமா? (நெகேமியா 13:27)_

நீதித்தலைவர் *சிம்சோன்* ஒரு பெலிஸ்திய பெண்ணைத் திருமணம் செய்ய முயற்சி செய்தபோது அவரது பெற்றோர் பேசிய வார்த்தைகளைக் கவனியுங்கள்.

_சிம்சோன், திமினாவுக்குச் சென்றார்; திமினாவில் *பெலிஸ்தியர்* மகளிருள் ஒருத்தியைக் கண்டார். அவர் திரும்பிச் சென்று தம் தந்தையிடமும் தாயிடமும், "நான் திமினாவில் ஒரு பெண்ணைக் கண்டேன். *அவள் பெலிஸ்திய மகளிருள் ஒருத்தி;* இப்பொழுது அவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்" என்றார். அவர் தந்தையும் தாயும் அவரிடம், "உன் உறவுப் பெண்களிடையே யாரும் இல்லையா? நம் மக்கள் அனைவரிடையே ஒரு பெண் கிடைக்கவில்லையா? *நீ ஏன் விருத்தசேதனம் செய்யப்படாத பெலிஸ்தியரிடம் சென்று பெண் எடுக்க வேண்டும்?"* என்று கேட்டனர். சிம்சோன் தம் தந்தையிடம், "அவளை எனக்கு மணமுடித்து வையும். ஏனெனில் அவளை எனக்குப் பிடித்திருக்கிறது" என்றார் (நீதித் தலைவர்கள் 14:1-3)_

மேற்கண்ட எல்லா வசனங்களிலும் இஸ்ரயேலர் *வேற்றினப் பெண்களை திருமணம் செய்யக்கூடாது* என்று அக்கால ஆன்மீக வழிகாட்டிகள் போதித்திருப்பதை பார்க்கிறோம். இதற்கு காரணம் என்ன என்று ஆராய்வோம்.

ஆண்டவர் மோசேயின் தலைமையில் இஸ்ரயேல் மக்களை எகிப்து நாட்டினின்று புறப்படச்செய்து கானான் நாட்டைநோக்கி அவர்கள் பயணிக்கும்போது திருமணம் செய்வது தொடர்பான அறிவுரைகளை அவர்களுக்கு வழங்கினார். அப்போது, கடவுள் மோசேயிடம் பேசிய கீழ்க்காணும் இறைவசனங்களை கவனமாக நீங்கள் வாசித்தால் அந்த காரணம் உங்களுக்கு தெளிவாக விளங்கும்.

_நீ அவர்களோடு (வேற்றினத்தாரோடு) திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளாதே. உன் மகளை அவர்கள் மகனுக்குக் கொடுக்காதே. உன் மகனுக்கு அவர்கள் மகளைக் கொள்ளாதே. ஏனெனில், *என்னை (கடவுளை) பின்பற்றுவதிலிருந்து உன் பிள்ளைகளை அவர்கள் விலக்கி, வேற்றுத் தெய்வங்களை வணங்கும்படி செய்வார்கள். அதனால், ஆண்டவரின் சினம் உனக்கெதிராய் மூண்டு உன்னை விரைவில் அழிக்கும்* (இணைச்சட்டம் 7:3,4)_

இந்த இறைச்சட்டத்தை மனதில் வைத்தே திருத்தூதர் பேதுரு கொர்நெலியுவின் வீட்டாரிடம், *"ஒரு யூதன் பிற குலத்தவரிடம் செல்வதும், அவர்களோடு உறவாடுவதும் முறைகேடு* என்பதை நீங்கள் அறிவீர்கள்" (திருத்தூதர் 10:28)_ என்கிறார்.

மேற்கண்ட வசனங்களின்படி, இஸ்ரயேல் மக்கள் உண்மையான தெய்வமாகிய ஆண்டவரை வழிபடாத வேற்றினத்தாரை திருமணம் செய்தால், இஸ்ரயேலர்களை உண்மையான கடவுள் வணக்கத்திலிருந்து பொய்யான கடவுள்களை (சிலைகளை) வணங்கும்படி வேற்றினத்தார் மாற்றிவிடுவார்கள் என்ற காரணத்தால் அவர்களை திருமணம் செய்யவேண்டாம் என்று  கட்டளையிட்டார் என்பது விளங்குகிறது.

இதையே திருத்தூதர் பவுலும் உறுதி செய்கிறார். _*நம்பிக்கை கொண்டிராதவரோடு உங்களைப் பிணைத்துக் கொள்ள வேண்டாம்.* இறைவனுக்கு ஏற்புடைய நெறிக்கு, நெறிகேட்டோடு என்ன உறவு? ஒளிக்கு இருளோடு என்ன பங்கு? கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் என்ன உடன்பாடு? நம்பிக்கை கொண்டோர்க்கு நம்பிக்கை கொண்டிராதவரோடு என்ன தொடர்பு? (2கொரிந்தியர் 6:14,15)_

_கணவர் உயிரோடு இருக்கும் காலம்வரை மனைவி அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறார். கணவர் இறந்துவிட்டால் தாம் விரும்புபவரைத் திருமணம் செய்து கொள்ள அவருக்கு உரிமையுண்டு. ஆனால் *அவர் திருமணம் செய்து கொள்பவர் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவராய் இருத்தல் வேண்டும்.* (1கொரிந்தியர் 7:39)_ என்று திருத்தூதர் பவுல் அறிவுறுத்துகிறார்.

மனிதனைப் படைத்த உண்மையான கடவுளுக்கு மனிதன் *எல்லாவற்றுக்கும் மேலான முக்கியத்துவம் கொடுத்து, அவரையே வணங்கவேண்டும்* என்று அவர் எதிர்பார்ப்பது சட்டப்படி சரியானதுதானே! அதனால்தான்,

_*என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன் (விடுதலைப் பயணம் 20:3-5)*_ என்று கடவுள் எச்சரிக்கிறார்.

_*நீ வேறொரு தெய்வத்தை வழிபடலாகாது, ஏனெனில் "வேற்றுத் தெய்வ வழிபாட்டை சகிக்காதவர்" என்பதே ஆண்டவர் பெயர். ஆம், அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன் (விடுதலைப் பயணம் 34:14)*_ என்று மோசே மூலம் அறிவுறுத்துகிறார் கடவுள்.

"கடவுள் தன்னை மட்டும்தான் இவ்வுலக மக்கள் வணங்கவேண்டும்; போலி தெய்வங்களை வணங்கக்கூடாது என்று ஏன் எதிர்பார்க்கிறார்? கடவுள் பொறாமைப்படலாமா?" என்று பலர் கேட்கின்றனர். இந்த கேள்விக்கு மனிதன் புரிந்துகொள்ளும் விதத்தில் ஒரு எடுத்துக்காட்டைச் சொல்கிறேன்.

நாம் பிள்ளைகளை பெற்று வளர்க்கிறோம். நம் பிள்ளைகள் நமக்கு முக்கியத்துவம் கொடுத்து, நமக்கு கீழ்ப்படியவேண்டும் என்று பெற்றோராகிய நாம் எதிர்பார்ப்பது எப்படி தவறாகும்? உயிரோடிருக்கும் தன் சொந்த தந்தையை விட்டுவிட்டு, ஒரு பிள்ளை வேறோருவரை தன் தந்தை என்று அழைப்பதை அதன் சொந்த தந்தையால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி அழைப்பது சட்டப்படி அநியாயமான தவறு அல்லவா!

அதுபோல, படைத்தவர்தான் படைப்பின் மகா முக்கியத்துவத்துக்கு (தொழுகைக்கு) தகுதியானவர் என்பது மறுக்கமுடியாத கூற்று. தன்னால் படைக்கப்பட்ட தன் மக்களை தன்னை வணங்குவதிலிருந்து போலி ஆன்மீகத்துக்கு அழைத்து சென்றவர்கள்மீது இறைவன் நடவடிக்கை எடுப்பதும், அவர்கள் கையில் உணர்வில்லாமல் சிக்கிய தன் பிள்ளைகளை தண்டித்து உணர்த்தி கரிசனையோடு, தன் பக்கம் திருப்பி அவர்களுக்கு பயனுள்ள போதனைகளை கற்பிப்பதும் பகுத்தறிவுப் பார்வையில் சரியானதல்லவா!

_எங்கள் ஆண்டவரே, எங்கள் கடவுளே, மாட்சியும் மாண்பும் வல்லமையும் பெற நீர் தகுதி பெற்றவர்; ஏனெனில் *அனைத்தையும் படைத்தவர் நீரே. உமது திருவுளப்படியே அவை உண்டாயின, படைக்கப்பட்டன* (திருவெளிப்பாடு 4:11)*_ என்று யோவான் தெளிவுபடுத்துகிறார். ஆக, படைத்தவர் படைப்பின் தொழுகைக்கு தகுதியானவர் என்று அறிகிறோம்.

பெற்றெடுத்த தங்களை வேதனைப்படுத்தி தங்கள் பிள்ளையை அபகரித்து சென்ற உறவுத் திருட்டை எந்த பெற்றோராலும் சகிக்கமுடியாது. அந்த குழந்தையின் சொந்த தந்தை நீதிமன்றத்துக்கு சென்று, வழக்காடி, குற்றவாளி அந்த தவறை திரும்பவும் செய்யாதபடி அவருக்கு தண்டனை வாங்கிக்கொடுத்து எப்பாடுபட்டாகிலும் தன் பிள்ளையை திரும்ப பெற்றுக்கொள்வதை தவறு என்று எந்த நீதிமன்றமும் கூறமுடியாது.

*"ஒருவர் என்ன குற்றம் செய்தாலும் அவருக்கு கருணையின் வடிவமான கடவுள் மரணதண்டனை கொடுப்பது மிக அநியாயமான தண்டனை அல்லவா!"* என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். எந்த குற்றம் செய்தவருக்கு எப்படிப்பட்ட தண்டனை கொடுக்கவேண்டும் என்பது படைத்த கடவுளுக்குத்தானே முழுமையாகத் தெரியும்!

நாம் பேசும் சில விஷயங்கள் குழந்தைகளுக்கு புரியாது. அதற்காக நாம் பேசுவது தவறு என்று கூறமுடியாது. குழந்தை பருவத்தில் சில விஷயங்கள் தவறாகத் தெரிவது வளர்ந்தபின் சரியாகத் தெரியும். குழந்தை பருவத்தில் சரியாகத் தெரிவது வளர்ந்தபின் தவறாகத் தெரியும். முன்பு *'உலகம் தட்டையாக இருக்கிறது'* என்று விஞ்ஞானிகள் சொன்னார்கள். ஆனால், அவர்களே இன்று *'உலகம் உருண்டையாக இருக்கிறது'* என்று கூறுகிறார்கள். மனித மூளை ஒரு வரம்புக்குட்பட்டது. இறைவனுடைய அறிவு எல்லையில்லாதது.

*"உயிர் என்றால் என்ன?* என்று நான் முழுமையாக தெரிந்துகொள்வதுவரை எனக்குள் உயிர் இருப்பதை நான் நம்பமாட்டேன்" என்று யாராவது சொல்லமுடியுமா?

ஒரு பிள்ளையை வாழவேண்டிய வழியில் நடத்தும் கரிசனையும் பொறுப்பும் அதன் பெற்றோருக்கு இருப்பதுபோல வேறு யாருக்கும் இருக்கமுடியாது. பிறர் அந்த குழந்தையை தவறான வழியில் நடத்தி அந்த பிள்ளை கெட்டுப்போனால், பெற்று வளர்த்த பெற்றோர்தானே பாதிக்கப்படுகிறார்கள்! அதுபோல போலி கடவுள்கள் மக்களை தவறான வழிகளில் நடத்தினால் மக்கள் கெட்டுப் போகும்போது படைத்த நிஜமான கடவுள் பாதிக்கப்படுவாரல்லவா?

நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன் (சங்கீதங்கள் 32:8) என்று ஆண்டவர் கூறுகிறார்.

_*இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே; உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே! (எசாயா 48:17)*_ என்று அக்கரையோடு அறிவிக்கிறார்.

தூய்மையாக வாழவேண்டும் என்னும் கொள்கையை கடவுள் தன் மக்களுக்கு கொடுத்திருக்கிறார். ஆனால், பாவம் செய்வது தவறு அல்ல என்று போலிக் கடவுள்கள் போதிக்கின்றன. உண்மையான கடவுள் தவறு செய்யமுடியாது. உண்மையான கடவுளை கண்டுபிடித்து அவரைப் பின்பற்றாவிட்டால், நாம் செய்யும் தவறுகள் நமக்கு தவறுகளாகவே தெரியாது.

_திருச்சட்டம் வழியாய் அன்றிப் பாவம் என்றால் என்ன என்று நான் அறிந்திருக்கமாட்டேன். எப்படியெனில், *"பிறருக்குரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே"* என்று சட்டம் சொல்லாமல் போயிருந்தால், அவ்விருப்பம் தவறு என்றே அறிந்திருக்க மாட்டேன். (உரோமையர் 7:7)_ என்று திருத்தூதர் பவுல் தெளிவாக்குகிறார்.

திருச்சட்டம் என்பது இஸ்ரயேல் மக்கள் எப்படி வாழவேண்டும் என்று கற்பிப்பதற்காக கடவுள் தன் தூதர் மோசே மூலம் கொடுத்த வாழ்வியல் விதிமுறைகள் ஆகும். அதை கொடுத்திருக்காவிட்டால் மனிதனுக்கு எது பாவம், எது பாவமல்ல என்பது தெரிந்திருக்காது.

நம் பாவ வாழ்வு நம்மை மட்டுமல்ல நாம் சார்ந்திருக்கும் சமூகத்தையும் பாதிக்கும். இம்மையில் பிறரை காயப்படுத்தி வாழ்வது நமது மறுமையையும் பாதிக்கும். அதுபோல, இம்மையிலும் மறுமையிலும் மனிதர்கள் எப்படிப்பட்ட ஒழுக்கத்தோடு வாழவேண்டும் என்று படைத்த கடவுளுக்குத்தானே முழுமையாகத் தெரியும்!

ஒரு பேருந்தை உருவாக்கிய பொறியாளருக்குத்தான் அந்த பேருந்தை எப்படி பயன்படுத்தவேண்டும் என்று தெரியும். அதனால், அந்த வண்டியை விற்கும்போது அந்த வண்டியோடு அதற்கான வழிகாட்டி கையேட்டையும் (Manual) கொடுக்கிறார்கள். அதுபோல மனிதனைப் படைத்த கடவுள் மனிதன் எப்படி  வாழவேண்டும் என்று கற்றுக்கொள்ள வேதாகமம் என்னும் கையேட்டையும் கொடுத்திருக்கிறார். அதுவே நம்மை முக்திக்கு வழிகாட்டுகிறது.

_"ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? *நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன!"* (யோவான் 6:68)_ என்று பேதுரு கூறுகிறார்.

போலிக்கடவுள் என்று ஒன்று உண்டா என்று சிலருக்கு குழப்பம் வரலாம். *'திருமணமே தேவை இல்லை; யாரோடு வேண்டுமானாலும் தாம்பத்திய வாழ்க்கை வாழலாம்'* என்னும் கொள்கையோடு இந்த உலகில் பலர் வாழ்கின்றனர். அவர்களுக்கு *'கணவன், மனைவி'* என்னும் சொற்கள் அர்த்தமற்றவையாக தெரியும். அதுபோல, *'எல்லாமே கடவுள்தான்'* என்னும் ஆன்மீக கொள்கை உடையவர்களுக்கு *'போலி ஆன்மீகம்'* என்னும் சொல்லாடல் சற்று அதிர்ச்சியளிக்கலாம்.

_நானே ஆண்டவர்; அதுவே என் பெயர்; *என் மாட்சியைப் பிறருக்கோ, என் புகழைச் சிலைகளுக்கோ விட்டுக்கொடேன்* (எசாயா 42:8)_ என்று தன் உரிமையை மக்களிடம் நிலைநாட்டுகிறார் படைத்த கடவுள். அவருக்கு உடைமையாக இருப்பதை அவர் உரிமை கோருவதில் தவறில்லையே! உலகைப்படைத்த தெய்வம் அவர்தான் என்னும் தெய்வீக உண்மையை விட்டு நெறி பிறழ்ந்து போலிக் கடவுள்களை பின்பற்றத் தொடங்கிய தன் பிள்ளைகளாகிய இஸ்ரயேலர்களை நீதியோடு தண்டித்து திருத்தியதும் குற்றமில்லையே! நம் பிள்ளைகள் தவறு செய்யும்போது நாம் அவர்களை தண்டிக்கிறோம். இது நம் பிள்ளைகள் மேல் நாம் வைத்திருக்கும் அன்பின் அடையாளம் அல்லவா!

ஒருமுறை ஒரு பெண்மணி என்னிடம், _*"நாங்கள் 33 கோடி கடவுள்களை வணங்கும் பரந்த மனப்பான்மை உடையவர்கள். ஆனால், நீங்கள் 'இயேசு மட்டுமே கடவுள்' என்று வணங்கும் குறுகிய மனப்பான்மை உடையவர்கள்"*_ என்று பெருமையாகக் கூறினார். உடனே நான், _"அம்மா, உங்கள் கணவர் உயிரோடு இருக்கும்போது நான் உங்கள் மகனிடம், 'தம்பி, உங்கள் அப்பா யார்?' என்று கேட்டால், 'அதோ அந்த மரத்தடியில் அமர்ந்திருக்கும் தாத்தாவும் என் அப்பாதான்; இந்த வண்டி ஓட்டும் இவரும் என் அப்பாதான்; என் அம்மாவுக்கு அருகில் உட்கார்ந்திருப்பவரும் என் அப்பாதான்' என்று சொன்னால் என்ன செய்வீர்கள்?"_ என்று கேட்டேன். உடனே அந்த தாய் என்னிடம், _"அப்படி என் மகன் சொன்னால் அவனுடைய நாக்கை அறுத்துவிடுவேன்"_ என்றார். உடனே நான், _"நீங்கள் பெற்ற பிள்ளையின் நாக்கை வெட்டுவது நியாயமா?"_ என்று கேட்டேன். அதற்கு அந்த தாய், _"ஒரே கணவனோடு வாழ்ந்துதான் இந்த பிள்ளையை பெற்றேன் என்னும் என் தன்மானம் முக்கியமல்லவா?"_ என்றார். உடனே நான், _"தாயே, நீங்கள் தர்மப் பத்தினி என்னும் உண்மையை நிலைநாட்ட, நீங்கள் பெற்ற பிள்ளையின் நாக்கை வெட்டுவீர்கள்; ஆனால், அகிலாண்டத்தைப் படைத்த ஒரே கடவுள் தான் உயிரோடு இருக்கும்போது, தன்னால் படைக்கப்பட்ட மனிதன் கடவுள் அல்லாத பொய்க் கடவுள்களை கடவுள் என்று சொல்லும்போது அதை கடவுள் சகிக்கவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? அதனால்தான் நாங்கள் ஒரே ஒருவரை தெய்வம் என்கிறோம்"_ என்றேன். மேற்கண்ட சம்பவத்தில் அந்த பெண்மணி அவருடைய கற்புத்தூய்மையை களங்கப்படுத்த யாருக்கும் உரிமை கொடுக்கமாட்டார். அதை யார் பொய்ப்பித்தாலும் அதை அவரால் தாங்கமுடியாதது நியாயம்தானே! அதுபோல, அகிலாண்டத்தைப் படைத்த உலகாளும் தெய்வம் தன்னுடைய மாட்சியை யாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டார். அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

ஆதாம் என்னும் ஒற்றை மனிதனிலிருந்து அனைத்து மக்களையும் படைத்த தெய்வம் *பிறவி இழிவு பாகுபாட்டை* அங்கீகரிக்கமுடியாது.

இப்போது, *ஆபிரகாமின் உறவினர்கள் அனைவரும் சிலைவழிபாட்டினர் அல்லவா!* என்று நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம்.

ஆபிரகாமை ஆண்டவர் அழைத்தபோது எபிரேயரில் யாருமே கடவுள் வணக்கத்தாராக இல்லை. எல்லாரும் சிலை வழிபாட்டினராகத்தான் இருந்தனர்.

_யாக்கோபின் மாமனார் லாபான், "உம் தந்தையின் வீட்டுக்குத் திரும்பும் ஆவலினால் நீர் இவ்வாறு வந்துவிட்டீர். ஆனால் *என் குலதெய்வச் சிலைகளைத்* திருடிக்கொண்டது ஏன்?" என்றான். (தொடக்கநூல் 31:30)_

_லாபான் ஆடுகளுக்கு உரோமம் கத்தரிக்கப் போயிருந்தபொழுது, ராகேல் தம் தந்தையின் *குலதெய்வச் சிலைகளைத்* திருடிவிட்டார். (தொடக்கநூல் 31:19)_

மேற்கண்ட வசங்களிலிருந்து ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் பெண் கிடைத்த வீட்டார் சிலைவழிபாடு செய்து வந்தவர்கள் என்பதை நாம் தெரிந்துகொள்கிறோம். ஆனால், ஆபிரகாம் ஆண்டவரோடு வைத்திருந்த உறவால் ஆபிரகாமின் உறவினர்கள் ஆபிரகாமின் கடவுள்மீது கொஞ்சம் பற்று வைத்திருந்தனர். ஆனாலும், தங்கள் சிலைவழிபாட்டையும் தொடர்ந்தனர். முழுமையாக கடவுளின் போதனைகளை அறிந்திருக்கவில்லை.இதை தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டுமானால் கீழ்க்காணும் இறைவர்த்தைகளை கவனமாக வாசிக்கவேண்டும்.

_லாபான் எலியேசரை நோக்கி, *"ஆண்டவரின் ஆசி பெற்றவரே வருக!* இங்குத் தாங்கள் வெளியே நிற்பது ஏன்? உமக்காக வீட்டையும், ஒட்டகங்களுக்காக இடத்தையும் துப்புரவு செய்து வைத்திருக்கிறேன்" என்று சொன்னான். (தொடக்கநூல் 24:31)_

_லாபானும் பெத்துவேலும் மறுமொழியாக, *"இச்செயல் ஆண்டவரால் நிகழ்ந்துள்ளது.* நாங்கள் உம்மிடம் இதற்குச் சாதகமாகவோ பாதகமாகவோ ஒன்றும் சொல்லக் கூடாது. (தொடக்கநூல் 24:50)_

மேற்கண்ட வசனங்களில் *ஆண்டவர்* என்ற சொல் ஆபிரகாம் வணங்கிய கடவுளை குறிக்கிறது. இதிலிருந்து, ஆபிரகாமின் உறவினர்கள் அடிப்படையில் சிலைவழிபாடு செய்தாலும், உண்மையான கடவுளையும் வழிபட்டனர் என்பது புரிகிறது. ஆபிரகாமின் வீட்டாருக்கு வாழ்க்கைத்துணை தேடும்போது *அந்த நாட்களில் வாழ்ந்துகொண்டிருந்த மக்களில் அறைகுறை நம்பிக்கையுடைய தன் சொந்தக்காரர்களைத்தவிர முழுமையான இறை நம்பிக்கையாளர்கள் யாருமே இல்லாமல் இருந்ததால்* ஆபிரகாம் தன் உறவினரிடம் சம்பந்தம் வைத்துக்கொண்டார். இதுதான் நிதர்சனமான உண்மையே தவிர ஆபிரகாம் சாதி உணர்வாளராக இருந்தார் என்பது உண்மைக்கு புறம்பானது என்று அறிகிறோம்.

*சாலமோனின் சோகமுடிவுக்கு காரணம்*

தாவீது அரசருடைய மகன் சாலமோனுடைய வாழ்வில் அவர் கடவுளின் வழிகாட்டுதலுக்கு கீழ்ப்படியாமல் யூதர் அல்லாத பல பெண்களை திருமணம் செய்ததால் அவரது வாழ்வின் பாதைமாறி சீர்கெட்டுப்போன வரலாற்றை ஆராய்வோம்.

_அரசர் சாலமோன் அயல்நாட்டுப் பெண்கள் பலர்மேல் மோகம் கொண்டார். பார்வோனின் மகளை மணந்ததுமின்றி *மோவாபியர், அம்மோனியர், ஏதோமியர், சீதோனியர், இத்தியர்* ஆகிய பல நாட்டுப் பெண்களையும் மணந்தார். அவ்வேற்றினத்தாரைக் குறித்து ஆண்டவர் இஸ்ரயேல் மக்களிடம், *"நீங்கள் அயல்நாடுகளிலிருந்து பெண் கொள்ளவும் வேண்டாம்; கொடுக்கவும் வேண்டாம்; ஏனெனில் அவர்கள் தம் தெய்வங்களை வணங்கும்படி உங்கள் உள்ளங்களை மயக்கி விடுவார்கள்"* என்று கூறியிருந்தார். அப்படிக் கூறியிருந்தும் அந்நாட்டுப் பெண்கள்மேல் சாலமோன் காதல் கொண்டிருந்தார். சாலமோனுக்கு *எழுநூறு அரசகுலப் பெண்கள் மனைவியராகவும் முந்நூறு பெண்கள் வைப்பாட்டிகளாகவும்* இருந்தார்கள். அப்பெண்கள் அவரது இதயத்தைத் தவறான வழியில் திருப்பி விட்டார்கள். சாலமோன் முதுமை அடைந்தபோது, *அவருடைய மனைவியர் அவர் இதயத்தை வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றும்படி மாற்றிவிட்டனர்.* அதனால் அவர் உள்ளம் தம் தந்தை தாவீதின் உள்ளத்தைப் போல் கடவுளாகிய ஆண்டவருக்கு முற்றிலும் பணிந்திருக்கவில்லை. *சாலமோன் சீதோனியரின் தேவதையான அஸ்தரோத்தையுதம் அம்மோனியரின் அருவருப்பான மில்க்கோவையும் வழிபடலானார்.* இவ்வாறு சாலமோன், ஆண்டவர் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தார். தம் தந்தை தாவீது ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியது போன்று அவர் செய்யவில்லை. *சாலமோன் எருசலேமுக்கு எதிரில் இருந்த மலையில் மோவாபியரின் அருவருப்பான கெமோசுக்கும் அம்மோனியரின் அருவருப்பான மோலேக்குக்கும் தொழுகைமேடுகளைக் கட்டினார். இப்படியே தங்கள் தெய்வங்களுக்குத் தூபம் காட்டிப் பலியிடுவதற்காக, வேற்றினத்தாரான தம் மனைவியர் எல்லோருக்கும் சாலமோன் இவ்வாறு செய்து கொடுத்தார். ஆண்டவர் சாலமோன்மீது சினமுற்றார். ஏனெனில் தமக்கு இருமுறை காட்சியளித்திருந்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து அவர் இதயம் விலகிச் சென்றது. வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம் என்று ஆண்டவர் அவருக்குக் கட்டளையிட்டிருந்தும், அக்கட்டளையை அவர் கடைப்பிடிக்கவில்லை. ஆகையால் ஆண்டவர் சாலமோனை நோக்கி, "நான் உன்னோடு செய்த உடன்படிக்கையையும், நான் உனக்கு விதித்த நியமங்களையும் மீறி, நீ இவ்வாறு நடந்துகொண்டதால் உன் அரசை உன்னிடமிருந்து பறித்து அதை உன் பணியாளனுக்குக் கொடுக்கப்போவது உறுதி* 1 அரசர்கள் 11:1-11)._

மேற்கண்ட இறைவார்த்தைகளிலிருந்து உண்மையான கடவுளை நம்பாதவர்களை வாழ்க்கைத் துணையாக தேர்வுசெய்வது  ஆன்மீக வாழ்வின் முன்னேற்றத்துக்கு மிகவும் இடைஞ்சலானது என்பதால்தான் நிஜ கடவுளை வணங்காதவர்களை திருமணம் செய்யக்கூடாது என்று கடவுள் அறிவுறுத்துகிறார் என்பதை அறிகிறோம்.

*(சாதியமே கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடை* என்னும் புத்தகத்திலிருந்து.......)

Comments

Popular posts from this blog

சனாதன தர்மம்

கிறிஸ்தவத்தின் அடிப்படை

சாதியம் இந்துத்துவ கொள்கை