கிறிஸ்தவர்களும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடும்

*கிறிஸ்தவர்களும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடும்*

_"சாதி ஒழியவேண்டும் என்று விரும்பும் நீங்கள் இந்திய அரசு சாதி அடிப்படையில் கொடுக்கும் இடஒதுக்கீட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"_ என்று பல கிறிஸ்தவர்கள் என்னிடம் கேட்கின்றனர்.
நம் மூதாதையர்கள் சாதி அடிப்படையில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்பட்டார்கள் என்னும் வரலாற்று உண்மை நம் உள்ளங்களில் வெட்டவெளிச்சமாக இருக்கிறது. ஆரியர்களால் உருவாக்கப்பட்ட சாதிய அடக்குமுறை கொள்கையாகிய வருணாசிரமம் என்னும் சட்டச்சங்கிலியால் 2000 ஆண்டுகளாக ஒரு பெருங்கூட்டம் அப்பாவி மனிதர்களை சிறைப்படுத்தி, மிருகங்களைவிட இழிவாக கொடுமைப்படுத்தி, அநியாயமாக அவர்கள் செல்வங்களை திட்டமிட்டு திருடி, உடலாலும் உள்ளத்தாலும் ஒடுக்கி உருக்குலைத்த காட்டுமிராண்டித் தனமான மகாபாதகத்தைப் பற்றிய வரலாற்றை வாசிக்கும்போது நெஞ்சம் பதறுகிறது. அந்த கொடுமைகளை வாசிப்பவர்களால் அதை எளிதில் மறக்கவும் முடியாது. அன்று வாழ்ந்தோர் இழந்த செல்வங்களை, செல்வாக்கை, நிம்மதியை இன்று வாழும் அவர்களுடைய வாரிசுகள் இழப்பீடாக பெற்றுக்கொள்வதே மறுக்கமுடியாத சமூக நீதியாகும். ஆதிக்க சாதியினர் நம் முன்னோர்களை  அடிமைப்படுத்தி இழைத்த கொடுமைகளுக்கு இழப்பீடாகத்தான் இந்திய அரசாங்கம் இன்று இடஒதுக்கீட்டை கொடுக்கிறது. அந்த இழப்பீட்டை சட்டப்படி வாங்க நமக்கு உரிமை உண்டு. ஏனெனில் நம் மூதாதையர்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்.
ஆனால், இயேசுவின் கல்வாரி தியாகத்தால் மீட்கப்பட்ட கிறிஸ்தவ சகோதரமே, நாம்தான் இந்துத்துவ வருணாசிரமம் ஒரு சமூகவிரோத கொள்கை என்று புரிந்து கொண்டு இந்துத்துவாவைவிட்டு வெளியேறிவிட்டோமே! கிறிஸ்தவன் சாதியற்றவன் அல்லவா! இனி நாம் இன்ன சாதி என்று கூறுவதே தவறு அல்லவா! கிறிஸ்தவத்துக்கும் இந்துத்துவ சாதியத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று அறிக்கையிட்டு, கிறிஸ்துவோடு இணைந்து விட்டோமே! சாதி ஒழியவேண்டும் என்பது நம் ஏக்கமல்லவா! அப்படியானால், நாம் விட்டுவந்த சாதியின் அடிப்படையில் வரும் எல்லா லாப நஷ்டங்களில் இருந்தும் நாம் நிரந்தரமாக அகலவேண்டுமே! கிறிஸ்தவர்கள் இந்துத்துவ சாதியின் பெயரைச் சொல்லி சலுகைகள் வாங்குவதுவரை கிறிஸ்தவர்களுக்குள் சாதி வேறுபாடுகள் எப்படி ஒழியும்? கிறிஸ்தவர்களுக்குள் சாதி வேறுபாடுகள் ஒழிவதுவரை இயேசுவால் சாதிப் பாகுபாடுகளிலிருந்து விடுதலை கொடுக்கமுடியும் என்று நாம் எப்படி நற்செய்தி அறிவிக்கமுடியும்? மக்கள் வருத்தப்பட்டு சுமக்கும் சாதி இழிவு என்னும் பாரத்தை சுமப்பவர்களுக்கு இயேசுவால் இளைப்பாறுதல் தரமுடியும் என்று நாம் எப்படி நிரூபிக்க முடியும்? எனவே, நாம் சற்றும் நம்பாத சாதியின் பெயரில் தரப்படும் எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதே முதிர்ந்த ஆன்மீகம் என்று நான் நினைக்கிறேன்.
இடஒதுக்கீடு என்னும் அற்ப லாபத்துக்காக இந்த கொடிய சாதி துவேஷ பொறியில் நிரந்தரமாக கிறிஸ்தவர்களை சிக்கவைத்து, இந்த துர்நாற்ற சாக்கடையிலிருந்து வெளியேற விடாமல் தடுத்து தங்கள் பிழைப்பிற்காக சாதியை ஒழிய விடாமல் பாதுகாக்கும் கிறிஸ்தவ 'ஆன்மீகவாதிகளும்', 'அரசியல்வாதிகளும்' பலருண்டு. 'கிறிஸ்தவர்' என்று அழைக்கப்படுவோரில் பெரும்பான்மையானவர்கள் நான் கூறும் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது எனக்கு தெரியும். ஏனெனில், இன்று கிறிஸ்தவர்கள் இயேசுவை படிப்பதைவிட அரசியல்வாதிகளையும், மதவாதிகளையும் படிப்பதற்கே அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.
நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்து விட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது (கொலோசையர் 3:1-3) என்று திருத்தூதர் பவுல் நம்மை அறிவுறுத்துகிறார். இவ்வுலக வாழ்வின் அற்ப லாபங்களுக்காக வாழாமல் கிறிஸ்துவின் தொலைநோக்கு தரிசனத்தோடு இணைவோம். இயேசு ஒரு கொடிய மரணத்தை அனுபவித்து நம்மை மீட்டதை தியானிப்போம். நமக்கு எதிராக பல்லாயிரம் ஆண்டுகளாக தீங்கு செய்த கொடியவர்களை இயேசுவின் அன்பை முன்னிட்டு பழிவாங்காமல் விட்டுவிடுவது தான் இயேசுவால் மீட்கப்பட்ட நமக்கும் பிறருக்கும் உள்ள வேறுபாடாக நான் கருதுகிறேன். கிறிஸ்தவர்களின் வாழ்வியல் தரம் மற்றவர்களைவிட உயர்ந்தது என்று பிறருக்கு நிரூபிக்கும் கருவியாக அது இருக்கும் என்றும் நம்புகிறேன். இறையியல்படி நமக்கு துரோகம் இழைத்தவர்களை கிறிஸ்து எப்படி பார்க்கிறாரோ அப்படித்தான் நாமும் பார்க்கவேண்டும் என்பது தான் முதிர்ந்த ஆன்மீகம். தன்னை சிலுவையில் அறைந்தாரை மன்னித்து, "தந்தையே, இவHகளை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவHகளுக்கு தெரியவில்லை (லூக்கா 23:34) என்று சொன்னவர் அல்லவா நம் ஆண்டவர்! அந்த அன்புதான் பிறரை கிறிஸ்துவிடம் அழைத்துவரும் காந்தசக்தி என்று என் இதயம் சொல்கிறது. நம் முன்னோர்களை கொடுமைப்படுத்திய அவர்களை மன்னிக்கும் அன்பு வலிமையை ஆண்டவரிடம் கேட்போம்.
கிறிஸ்துவை அறியாதவர்கள் பிறரை வஞ்சம் தீர்த்தால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால், நமக்காக தன் உயிரையே கொடுத்த இயேசுவின் கண்கள் வழியாக நாம் பிறரை பார்த்தால் அவர்களை பழிவாங்கமுடியாது அல்லவா! கிறிஸ்து நம்மை மன்னித்ததுபோல நாமும் பிறரை மன்னிக்க அழைக்கப்பட்டிருக்கிறோமே! (கொலோசையர் 3:13, எபேசியர் 4:32). 
ஒருமுறை இயேசு சீடர்களைப் பார்த்து, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என்பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரHகளையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகமாட்டாH" (மாற்கு 10:29,30) என்று கூறினார்.
கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதி பாகுபாடுகளை நாம்  விரைவில் ஒழிக்கவேண்டுமானால் நமக்கு லாபமாக இருக்கும் சிலவற்றை நஷ்டமென்று கருதவேண்டும் (பிலிப்பியர் 3:7). ஒருவர் நம்மை கெட்ட வார்த்தையால் திட்டிவிட்டார் என்பதற்காக, நாமும் திருப்பி அவரை கெட்ட வார்த்தையால் திட்டுவதில் கிறிஸ்தவம் எங்கே இருக்கிறது? மனிதர்கள் யாரும் நமக்கு எதிரிகள் அல்ல. சாத்தான் மட்டுமே நமக்கு எதிரி என்பதை எப்போதும் நம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். யார் வேண்டுமானாலும் நம்மை வஞ்சம் தீர்க்கலாம். ஆனால், கிறிஸ்துவை உடையவர்கள் யாரையும் வஞ்சம் தீர்க்கக்கூடாது. சட்டப்படி நமக்கு தீங்கு இழைத்தவரை அரசாங்க நீதித்துறையின்மூலம் தண்டிக்கும் உரிமை நமக்கு உண்டு. சட்டத்தின் நீதிப்படி நம்மை காயப்படுத்தியவர்களை நாம் திருப்பி காயப்படுத்தலாம். ஆனால், நாம் செய்த குற்றங்களை கிறிஸ்து தன் மனதில் வைத்து நம்மை சட்ட நீதிப்படி தண்டித்தாரா? கிறிஸ்து பழிவாங்கினாரா? அல்லது பழிவாங்கச் சொன்னாரா? கிரகாம் ஸ்டேன்ஸ் என்னும் ஆஸ்திரேலிய ஊழியரை அவருடைய இரு பிள்ளைகளோடு மதத்தீவிரவாதிகள் அவருடைய வாகனத்தில் வைத்து கொளுத்தி கொன்றனர். வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றவாளிக்கு சட்டப்படி தண்டனை அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்னாருடைய துணைவியார் குற்றவாளிக்கு தண்டனை கொடுக்கவேண்டாம் என நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டதால் அந்த கொலைக் குற்றவாளி விடுதலை அடைந்தார். இது நம் எல்லோருக்கும் ஒரு முன்மாதிரி பாடமாக இருக்கவேண்டும் என்று நான் இறைமக்களுக்கு ஆலோசனையாக கூறுகிறேன்.
"அன்பாHந்தவHகளே! பழிவாங்காதீHகள்; அதைக் கடவுளின் சினத்திற்கு விட்டுவிடுங்கள். ஏனெனில், மறைநூலில் எழுதியுள்ளவாறு, பழிவாங்குவதும் கைம்மாறு அளிப்பதும் எனக்கு உரியன (உரோமையர் 12:19, எபிரேயர் 10:30) என்று இறைவன் கூறுகிறார்.
இந்துத்துவ சாதி அடிப்படையில் யாரிடமும் எந்த உதவியையும், இழப்பீட்டையும் பெற்றுக்கொள்ளாமலேயே கடவுள் நம்மை உயர்த்தமுடியும் என மனப்பு+ர்வமாக நம்புவோம். ஆண்டவரின் ஆசி செல்வம் அளிக்கும்; அச்செல்வம் துன்பம் கலவாது அளிக்கப்படும் செல்வம் (நீதிமொழிகள் 10:22) என வேதம் கூறுகிறது. அப்படி நமக்கு வரும் உயர்வுமூலம்தான் கடவுளுக்கு புகழ்ச்சி உண்டாகும். கிறிஸ்தவர்களுக்குள் இந்துத்துவ சாதி என்னும் பேய் இன்னும் அழியாததற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று நம் வாயாலேயே இந்துத்துவ சாதிப் பெயரை சொல்லி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வாங்குவதுதான். "நான் எந்த சாதியையும் சார்ந்தவன் அல்ல" என்று தைரியமாக சொல்லமுடியாமல் நிற்கிறோம். இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டதால், நம்மை நாமே 'கீழ்சாதி' என்று அழைத்து பிறருடைய பரிதாபத்தை சம்பாதிக்கும் உரிமையை இழந்துவிடுகிறோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை என்பது ஆழமாக சிந்தித்தால் புரியும்.
எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமையுண்டு, ஆனால் எல்லாம் நன்மை தரக்கூடியவையல்ல. எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமை உண்டு. ஆனால், எதற்கும் நான் அடிமையாகிவிடமாட்டேன் (1கொரிந்தியர் 6:12) என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார்.
"என் மூதாதையர்கள் ஆதிக்க சாதியினரால் நசுக்கப்பட்டதால் எனக்கு நியாயப்படி வரவேண்டிய இழப்பீட்டை சாதியின் அடிப்படையிலேயே பெற்றுக்கொள்வேன் என்று கிறிஸ்தவர்கள் நியாயம் பேசுவது கிறிஸ்து நமக்கு கற்றுக் கொடுத்த புதிய உடன்படிக்கை பண்பாடு அல்ல.  கிறிஸ்தவர்கள் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வாங்குவது, பேருந்தில் பயணம் செய்யும்போது நிற்க முடியாமல் முதியவர் ஒருவர் தள்ளாடிக்கொண்டே நம் அருகில் நின்றுகொண்டிருக்கையில் அவருக்கு இடம் கொடுக்காமல் நாம் 'கீழ்சாதி' என்று கூறிக்கொண்டு நம் இருக்கையிலேயே அமர்வது போன்றது. பசித்தவர் எந்த சாதியானாலும் உணவளிக்கவேண்டும். பசி, வறுமைக்கு சாதி இல்லை. படைத்த கடவுளின் பார்வையில் ஆரியன், திராவிடன் என்று வேறுபாடுகள் இல்லை. தமிழன், மலையாளி, தெலுங்கன், கன்னடன் என்று பாகுபாடுகள் இல்லை.
"சாதி ஒழிந்தாலும் ஒழியாவிட்டாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை; சாதியின் பெயரைச்சொல்லி இடஒதுக்கீடு வாங்கி பணக்காரனாக மாறுவது மட்டும்தான் என் இலட்சியம் என்னும் குறுகிய எண்ணம் உடைய கிறிஸ்தவர்களுக்கு நான் சொல்லும் இந்த ஆன்மீக கருத்துக்கள் மிகவும் கசப்பாக இருக்கும். ஆனால், கிறிஸ்தவர்களுக்குள் சாதி ஒழிந்து ஒற்றுமை மலர்ந்தால்தான் ஆண்டவருடைய பெயருக்கு புகழ்ச்சி உண்டாகும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வாங்குபவர் தன் சாதியின் பொருட்டு சகமனிதர்களால் இழிவாக நினைக்கப் படுவதாலேயே சாதியம் மிக விரைவாக ஒழிக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில், சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கப்படுவதுவரை சாதியை ஒழிக்கமுடியாது என்னும் நிதர்சனமான உண்மையையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். சாதி ஒழிவதுவரை சாதி இழிவிலிருந்து விடுதலையும் இல்லை.
அரசு சாதி மறுப்பாளர்களுக்கு சாதியற்றோர் (ழேn ஊயளவந - Nஊ) என்று ஒரு தனிப்பிரிவை உருவாக்கி அவர்களுக்கு தனி இடஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்று நான் இந்த புத்தகத்தின்மூலம் இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். பிறர் நம்மை வெறுப்பதற்கு காரணமாக இருக்கும் நம் சாதிப் பெயரை நம் வாயாலேயே சொல்லி சலுகை வாங்கிக்கொண்டிருப்பதுவரை, அந்த விசுவாசி எனக்கு பெண்தரவில்லை; அவர் என்னிடம் பெண் எடுக்கவில்லை என்று யாரைப்பற்றி குற்றம் சாட்டுவதிலும் அர்த்தமில்லை. நாம் சாதியை விடாமல் பிடித்து கொண்டிருப்பதுவரை, பிறருடைய சாதியை அவர்கள் விடவேண்டுமென்று அவர்களுக்கு அறிவுரை சொல்ல நமக்கு உரிமையும் இல்லை.
இடஒதுக்கீட்டின் மூலம் கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதி ஒழிந்ததா?
"இடஒதுக்கீட்டின் மூலம் பட்டமும், பதவியும், பணமும் வந்தவுடன் சாதி தானாக ஒழிந்துவிடும் என்று சில கிறிஸ்தவர்கள் விதண்டாவாதம் பேசுகிறார்கள். சாதியின் பெயரைச் சொல்லி இடஒதுக்கீடு வாங்கி கல்வி, பட்டம், பதவிபெற்று, பணக்காரராகிவிட்டால் இந்த சாதி பாகுபாட்டு மனப்பான்மை நம்மைவிட்டு அகன்று சமத்துவம் வந்து விடும் என்று நானும் முன்பு நினைத்தேன். ஆனால், நான் நினைத்தது தவறு என்று இந்திய கிறிஸ்தவர்களின் வரலாறு நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. அன்று தாழ்த்தப்பட்டவர்களோடு ஒடுக்கப்பட்டவர்களாக உரிமையிழந்து கிடந்த 'சாணார்கள்' என்று தங்களை அழைத்துக்கொண்டவர்கள் பணக்காரர்களாக மாறியவுடன் சாதி உணர்வு அவர்களைவிட்டு மறைந்துவிட்டதா? தங்கள் மணமக்களுக்கு சாதி பார்க்காமல் திருமணம் செய்யும் மனப்பக்குவம் அவர்களுக்கு வந்துவிட்டதா? முன்பு திருச்செந்தூர், கமுதி, மதுரை, திருச்சுழி கோவில்கள் உட்பட இந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட எந்த அரசு கோவில்களுக்குள்ளும் நுழைய அனுமதி மறக்கப்பட்டிருந்த தங்களோடு சக ஒடுக்கப்பட்டவர்களாக இருந்த 'பள்ளர்', 'பறையர்', 'சக்கிலியர்' என்று அழைக்கப்படுபவர்களை இன்று தங்கள் சகோதரங்களாக பார்க்கிறார்களா? தங்கள் சாதியின் பெயராகிய 'சாணார்' என்பது இழிவான சொல் என நினைத்து அந்த பெயரை எடுத்துவிட்டு 'நாடார்' என்று மாற்றிக் கொண்டார்கள். பணம் வந்ததனாலான பயன் அவ்வளவுதான். பிறரை இழிவாக பார்க்கும் ஆதிக்க உணர்வு இவர்கள் கிறிஸ்தவர்களாக மாறியபின்பும் இருக்கிறதே! "மீட்கப்பட்டேன், அபிஷேம் பெற்றேன், அந்நிய பாஷையில் பேசுகிறேன், தீர்க்கதரிசனம் சொல்கிறேன் என்று சொல்பவர்களுக்கும் சிலைவழிபாடு செய்வோருக்கும் சமூகவாழ்க்கை என்று வரும்போது என்ன வித்தியாசம் வந்துவிட்டது?
பணம் வந்தால் சாதி உணர்வு போய்விடும் என்று நம்புவது நாம் நமக்கே செய்யும் பச்சை துரோகம் ஆகும். இந்த பொய்யான தத்துவத்தை நம்பி, உணர்ச்சிவசப்பட்டு 'தாழ்த்தப்பட்டவர்கள்', 'பிற்படுத்தப்பட்டவர்கள்' என்று மக்கள் பரிதாபத்தோடு அழைப்பது தான் நமக்கு லாபம் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது தவறான கணக்கீடு. தலித்துகளை நேசிப்பதுபோல் நடிக்கும் பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் பலரை எனக்கு தெரியும். ஆனால், அவர்கள் யாரும் தலித்துகளுடைய வீட்டில் பெண் எடுக்கவோ கொடுக்கவோமாட்டார்கள். சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தரப்படவேண்டும் என்று ஒடுக்கப்பட்டவரை ஆதரிப்பதுபோல நடிக்கும் பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவரிடம், "ஐயா எங்களுக்கு சலுகைகள் எதுவும் வேண்டாம். உங்கள் வீட்டு பிள்ளைகளை எங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுங்கள்" என்று சொல்லுங்கள். அவர்கள் தலை தெறிக்க ஓடி விடுவார்கள். ஒரு தலித் கிறிஸ்தவர் இடஒதுக்கீட்டின் மூலம் பணக்காரராகி விட்டதால், இவரோடு 'உயர்வகுப்பினர்' என்று அழைக்கப்படுபவர்கள் திருமணம் செய்வார்களா? அப்படியே அந்த சந்தர்ப்பவாத திருமணம் நடந்தாலும் இவரை அல்ல; இவருடைய பணத்தைத்தானே திருமணம் செய்கிறார்கள்! இதுதானே மறுக்கமுடியாத உண்மை! நாங்கள் கிறிஸ்தவத்தைத் தழுவினாலும் எங்களுக்குள் சாதி பாகுபாடுகள் உண்டு. அது ஒழியும் என்று எங்களுக்கு அணுவளவுகூட நம்பிக்கை இல்லை என்று கல்வி அறிவுடைய பாதிரியார்களே சொல்வது படுகேவலமாக உள்ளது. இந்து தலித்துகளுக்கு கொடுக்கப்படும் இடஒதுக்கீடு கிறிஸ்தவ தலித்துகளுக்கும் தரவேண்டும் என்று வெட்கமில்லாமல் கேட்கும் கிறிஸ்தவ 'அறிஞர்களை' நினைத்தால் அசிங்கமாக இருக்கிறது. சாதியத்தை இயேசுவின் போதனைகளால் ஒழிக்க வேண்டியவர்கள் சாதியை ஒழியவிடாமல் தடுப்பது மன வேதனையை கூட்டுகிறது.
கிறிஸ்துவின் சிலுவை அன்பைப் பற்றிய நமது போதனைகள் மூலம் ஆயிரக்கணக்கானோர் சாதியத்தை விட்டுவிட்டார்கள். நீங்களும் இலட்சியத்தோடு எழும்புங்கள். உங்கள் மனசாட்சிக்கு மட்டுமே பயப்படுங்கள். நீங்கள் எடுக்கப்போகும் இந்த புரட்சிகரமான முடிவுக்கு எதிராக உங்கள் பெற்றோர், உறவினர், நண்பர்கள், சாதியை வைத்து பிழைக்கும் அரசியல் கட்சியினர், ஆன்மீகவாதிகள் என்று எத்தனைபேர் எழுந்தாலும் பயப்படக்கூடாது. முதல் நூற்றாண்டில் கிறிஸ்துவை தங்கள் மீட்பராக ஏற்றுக்கொண்ட மந்திரவாதிகள் அவர்களுக்கு லாபமாக இருந்த விலை உயர்ந்த மந்திர புத்தகங்களை எரித்தனர் என்று பைபிள் கூறுகிறது. நம்பிக்கை கொண்டோர் பலரும் தாங்கள் செய்த தவற்றை ஒப்புக்கொண்டு அறிக்கையிட்டனர். மாய வித்தைகளைச் செய்து வந்த பலரும் தங்கள் நூல்களைக் கொண்டு வந்து அனைவர் முன்பாகவும் அவற்றைச் சுட்டெரித்தனர்; அவற்றின் விலை ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசு என்று கணக்கிட்டனர் (திருத்தூதர் பணிகள் 19:18-19). இறைப்பற்று பெரும் ஆதாயம் தருவதுதான்; ஆனால் மனநிறைவுள்ளவர்களுக்கே தரும். உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. எனவே, உணவும் உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம். செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள்; அறிவீனமான, தீமை விளைவிக்கக்கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை. பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக் கொள்கிறார்கள் (1திமொத்தேயு 6:6-10) என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார்.
பள்ளியில் சாதி கேட்கிறார்களே!
இந்திய நாட்டில் சாதியை ஒழிப்பதற்காக பல கிறிஸ்தவ சமூகவியல் அறிஞர்கள் பன்னெடுங்காலமாக முயற்சி செய்தும் சாதி ஒழியாத காரணம் என்ன? சாதி ஒழியவேண்டும் எனும் நல்ல இலட்சியம் நம்மில் பலருக்கு இருந்தாலும், பள்ளிக் கூடங்களில், அரசு அலுவலகங்களில் அதிகாரிகளோ, நம் வீட்டுக்கு மக்கள் தொகை கணக்கெடுக்க வரும் அதிகாரிகளோ கேட்டவுடன் சாதியின் பெயரை நாம் கூறி விடுகிறோம்; அது மிகப்பெரிய தவறு. கிறிஸ்தவர்களுக்கும் இந்துத்துவ சாதி வேறுபாடுகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று எங்கும் நாம் அழுத்தமாக பதிவுசெய்யவேண்டும். அரசாங்க இடஒதுக்கீடு வாங்குவதற்காகத்தான் நமக்கே பிடிக்காத சாதி பெயரை நம் வாயாலேயே சொல்ல நாம் அதிகாரிகளால் அழுத்தப்படுகிறோம்.
இடஒதுக்கீட்டுக்காகத் தான் நம் சாதிப்பெயர் அரசுப் பதிவேட்டில் பதிவு செய்வது தொடங்கப்பட்டது. இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.  சாதியின் பெயர் அதிகாரபு+ர்வமாக பயன்படுத்தப்படுவதுவரை சாதி ஒழியவே ஒழியாது என்பதை நாம் நுட்பமாக புரிந்துகொள்ளவேண்டும். அரசு பதிவேட்டில் சாதி பதிவு செய்யப்படுவதற்கு 2000 ஆண்டுகளுக்குமுன்னே வருணாசிரம சட்டம் நிலவிலிருந்த போதே சாதிக்கொடுமைகள் இந்தியாவில் இருந்ததே! என்று நீங்கள் இங்கே ஒரு நல்ல கேள்வி கேட்கலாம். நீங்கள் கேட்பது மிகவும் நியாயமானதே. ஆனால், அன்று சாதிப் பாகுபாட்டு சட்டமே சமூகச் சட்டமாக இருந்தது. அன்று இந்துத்துவ வருணாசிரம சட்டத்தைத்தான் இந்துக்கள் பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. சாதிமாறி திருமணம் செய்தவர்கள் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்பட்டனர். ஆனால், இன்று சாதியை எங்குமே பயன்படுத்த அரசு கட்டாயப்படுத்தவில்லையே! சிந்தியுங்கள்.
பள்ளி சான்றிதழில் சாதிப் பெயர் குறிப்பிடாத மலேஷியா, இலங்கை பொன்ற நாடுகளில் வாழும் பெரும்பான்மையான விசுவாசிகள் சாதி பார்க்காமலேயே திருமணம் செய்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் சாதியை பள்ளி சான்றிதழில் பயன்படுத்தாததால் சாதியை மறக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
என் மகனை பள்ளியில் சேர்க்கும்போது அவனுடைய சாதி என்ன என்று பள்ளி நிர்வாகத்தார் கேட்கவில்லை. ஏனென்றால், சாதி மறுப்பாளராக இருந்த என் மனைவி அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியதால் நாங்கள் சாதி மறுப்பாளர்கள் என்று பள்ளி அதிகாரிகள் புரிந்துகொண்டு, அவனுடைய பள்ளி மாற்றுச் சான்றிதழில் சாதி என்னும் இடத்தில் இந்திய கிறிஸ்தவர் என்று எழுதினார்கள். கடவுளுக்கே புகழ்ச்சி உண்டாகட்டும். என் மகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுத சாதி என்ன என்று கேட்டார்கள். "சாதி இல்லை என்று சொன்னேன். மீண்டும் மீண்டும் "உன் சாதி என்ன என்று அப்பாவிடம் கேட்டுசொல்" என்று பள்ளி ஆசிரியர்கள் என் மகளிடம் சொல்லி அனுப்பினார்கள். "நான் சாதியற்றவள் என்று சொல்" என்று சொல்லி அனுப்பினேன். அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். நீங்களும் அதுபோல நிமிர்ந்து நில்லுங்கள். இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நாம் எல்லாரும் சாதி மறுப்பில் ஓரணியாக திரளுவோம். கடவுள் உங்களுக்கு துணைபுரிவார். உங்கள் சாதி என்ன? என்று கேட்டு பள்ளி நிர்வாகிகள் கட்டாயப்படுத்துவதாக விசுவாசிகள் பலர் என்னிடம் கேட்டனர். ஆனால், அரசு பதிவேடுகளில் நமது ஜாதிப்பெயர் எழுதத் தேவையில்லை என்று அரசாங்கம் 1973-லேயே ஆணை பிறப்பித்திருக்கிறது. சாதியின் பெயரை சொன்னால்தான் பள்ளியில் சேர்ப்;பதாக பள்ளி நிர்வாகம் உங்களை வற்புறுத்தினால், 1973-ம் ஆண்டு வெளிவந்த அரசாணையை நம் இணைய தளத்திலிருந்து (றறற.niஅஅயவாi.உழஅ) பதிவிறக்கம் செய்து, கீழ்காணும் மனுவையும் பு+ர்த்தி செய்து பள்ளி நிர்வாகத்தினரிடம் கொடுங்கள். அவர்கள் உங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள்.
                            தேதி :
பெறுநர்
தலைமை ஆசிரியர் மற்றும் முகவரி

அனுப்புநர்
உங்கள் பெயர் மற்றும் முகவரி

மதிப்புக்குரிய ஐயா,

எனது மகன் ......., உங்கள் பள்ளியில் ..... ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறான். நாங்கள் சாதி மறுப்பு கொள்கை உடையவர்கள். கிறிஸ்தவத்துக்கும் சாதியத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதால் சாதியின் பெயரை பயன்படுத்துவதையே தவறு என்று கருதுகிறோம். எனவே, சாதி பெயரை பயன்படுத்தி கிடைக்கும் எந்த இடஒதுக்கீடும் எங்களுக்கு தேவையில்லை என இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். பள்ளி சான்றிதழில் சாதியின் பெயரை குறிப்பிட வேண்டிய தேவை இல்லை என்று 1973-ல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை நகலையும், அதை விளம்பரப்படுத்திய தினமலர் நாளிதழின் நகலையும் இத்துடன் இணைத்துள்ளோம். எனவே, எனது மகனுக்கு சாதி என்னும் இடத்தில் சாதி இல்லை என்று பதிவு செய்யவேண்டும் என்று தாழ்மையோடு வேண்டுகிறேன்.

தங்கள் உண்மையுள்ள
(உங்கள் கையெழுத்து)

அப்படியும் அவர்கள் உங்கள் பிள்ளையை பள்ளியில் சேர்க்க மறுத்தால், "சாதி சான்றிதழ் தராவிட்டால் நாங்கள் பிள்ளையை பள்ளியில் சேர்க்கமாட்டோம்" என்ற அவர்களுடைய அறிக்கையை எழுத்து வடிவத்தில் வாங்கி நீதிமன்றத்திலே வழக்கு தொடரலாம்.
இப்போது கிறிஸ்தவர்கள் சிலர் சாதி வேறுபாடுகளை மதிக்காமல் சாதி மறுப்பு திருமணம் செய்கிறார்கள். அது வரவேற்கத்தக்கது. சாதி மறுப்பு திருமணங்களின்மூலம் தான் சாதி ஒழியும் என்பதே தீர்க்கமான உண்மை. ஆனால், அந்த தம்பதியருக்கு பிறக்கும் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போது, அந்த பிள்ளைகளின் தந்தை தன் சாதியை சொல்லி பதிவு செய்கிறார். இப்படி செய்தால் எப்படி சாதி ஒழியும்? இது விலையுயர்ந்த ஒரு பொருளை சாக்கடையிலிருந்து எடுத்து கழுகி திரும்பவும் அந்த சாக்கடையிலேயே எறிவதுபோல அல்லவா இருக்கிறது! சகோதரங்களே, நீங்கள் எந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போதும், சாதி என்ன? என்ற கேள்விக்கு 'சாதி இல்லை' என்று பதிவு செய்யுங்கள். நிஜமாகவே நாம் இந்துத்துவ சாதியத்தை நம்பவில்லை என்பதன் ஆதாரமே இதுதான்.
பள்ளிப் பருவத்தில் ஒரேதாயின் பிள்ளைகளைப்போல பேதமின்றி வாழும் மாணவர்களுடைய ஒற்றுமை உணர்வுக்கு ஊறு விளைவிக்கும் சம்பவங்கள் பள்ளியில் நடக்கின்றன. எல்லா மாணவர்களும் அமர்ந்திருக்கும் போது தாழ்த்தப்பட்ட மாணவர்களை மட்டும் எழும்பி நிற்கச் சொல்லி சாதிவாரியான கல்வி உதவியை கொடுப்பார்கள். அன்றுமுதல் எழும்பி நின்ற அந்த மாணவர்களை சக மாணவர்கள் தங்கள் நட்பு வளையத்திலிருந்து ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். அடிமைத்துவமும் அடக்குமுறையும் அங்கேயே தொடங்குகிறது. இதுதானே யதார்த்த உண்மை! இதை யாரும் மறுக்கமுடியுமா? பள்ளிப் பருவத்திலேயே பிஞ்சு மனங்களில் விதைக்கப்படும் இந்த நச்சு விதை அவர்கள் வளரும் போது அவர்களை சாதி சங்கத் தலைவர்களாகவும், சாதி வெறியர்களாகவும் மாற்றி விடுகிறது.
இன்று இந்தியாவில் சில சாதி வெறியர்களைத்தவிர பெரும்பான்மையான மற்றவர்கள் பிறரிடம், நீங்கள் என்ன சாதி? என்று கேட்பதையே அசிங்கமாக நினைக்கிறார்களே! அரசுப் பதிவேட்டில் சாதியை பதிவு செய்யாவிட்டால், நாம் என்ன சாதி என்பது நமக்கே ஒருநாள் மறந்துவிடுமே! சாதி வாரியாக இடஒதுக்கீடு கொடுப்பது, சாதிச் சாக்கடையிலிருந்து தப்பித்து ஓட நினைக்கும் சுயமரியாதையாளர்களையும் வெளியேறவிடாமல் தடுத்து நிறுத்துகிறது. இந்த கருத்தை நிஜமான சாதி மறுப்பாளர்கள் எல்லாரும் இப்போது ஒத்துக் கொள்கிறார்கள்.
நல்ல விடயத்திற்காக தனியாக நிற்கவேண்டிய நிலை வந்தாலும் தைரியமாக நிற்போம். நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்! உன்னை விட்டு விலகமாட்டேன் (எபிரேயர் 13:5) என்று உறுதிமொழி சொன்ன கடவுள் இன்றும் உயிரோடு இருக்கிறார். பயப்படாதீர்கள். கடவுள் நமக்கு துணையிருப்பார். ஜப்பான் நாட்டில் நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்த இன தீண்டாமை கொடுமைகளை இட ஒதுக்கீடு இல்லாமலேயே முறியடித்துள்ளனர் என்று ஜப்பானிய வரலாறு சொல்கிறது. விதவை, நோயாளி, பெற்றோரை இழந்தவர், மாற்றுத்திறனாளி, சுதந்திரப் போராட்ட தியாகி, ஏழை என்பதற்காக அரசாங்கம் சலுகைகள் தருமானால் நாட்டு குடிமகன் என்ற முறையில் அவற்றை நாம் பெற்றுக்கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

சனாதன தர்மம்

கிறிஸ்தவத்தின் அடிப்படை

சாதியம் இந்துத்துவ கொள்கை