நீ கீழ்சாதி அல்ல

*நீ கீழ்சாதி அல்ல*

_"உங்களுக்கு தன்மான சுயமரியாதை உணர்வு ஏற்படாததே உங்களுடைய இழிவுக்குக் காரணம். நீங்கள் உங்களை தாழ்ந்தவர்கள் என நினைத்துக்கொள்ளாமல், நீங்களும் மற்றவர்களைப்போன்ற மனிதர்கள்தான் என்று எண்ணிக்கொண்டு அதற்கு ஏற்றவிதமாக நடந்துகொள்ள துணிவு கொள்ளுங்கள். அதனால் ஏற்படும் துன்பங்களை சகிக்க தைரியம் கொள்ளுங்கள். சீக்கிரத்தில் விடுபடுவீர்கள்"_ என்று *'பறையன் பட்டம் போகாமல் சூத்திரன் பட்டம் போகாது'* என்னும் புத்தகத்தில் *ஈ.வெ.ரா. பெரியார்* என்ற சமுதாய சீர்திருத்தவாதி அருமையாக எழுதியிருக்கிறார். இயேசுவை மீட்பர் என்று கண்டுபிடிக்கமுடியாத நாத்திகர் ஈ.வெ.ராமசாமியின் கருத்து எவ்வளவு ஆழமாக இருக்கிறதென்று பாருங்கள்!

கிறிஸ்தவத்துக்கும் சாதியத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று முந்திய அத்தியாயங்களில் நாம் தெளிவாக படித்தோம். மனிதனைப் படைத்த நிஜமான கடவுள் மனிதனை 'கீழ்சாதி', 'மேல்சாதி' என்று பிரித்து படைக்கவில்லை என்று தெளிவான ஆதாரங்களோடு பயின்றுவிட்டோம். அப்படியிருக்க, உண்மையை அறிந்துகொண்ட கிறிஸ்தவர்களாகிய நாம் ஏன் நம்மை 'கீழ்சாதி' என்று ஒத்துக்கொள்ளவேண்டும்? நம்மை கீழ்சாதியாக மாற்றியது யார்? இயேசு கிறிஸ்து தன் சீடர்களில் யாரையாவது 'சூத்திரன்' என்றோ 'பஞ்சமன்' என்றோ எங்காவது அழைத்ததுண்டா? அவருடைய திருத்தூதர்கள் யாராவது இறைமக்கள் யாரையாவது 'பிற்படுத்தப்பட்டவர்', 'மிகவும் பிற்படுத்தப்பட்டவர்' 'தீண்டத்தகாதவர்' என்று அழைத்ததுண்டா?

ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மனிதனை அடிமைப் படுத்தி அநியாயமாக பணம் பறிக்கவேண்டும் என்று திட்டமிட்டு, _"நீ ஒரு எய்ட்ஸ் நோயாளி; அதனால்தான் உன் தோல் கருப்பாக இருக்கிறது"_ என்று நயவஞ்சக போலி மருத்துவர் ஒருவர் சொன்னதால், இவர் பல்லாயிரக்கணக்கான பணத்தை செலவு செய்து, எய்ட்சுக்கான மருந்து உட்கொண்டு, பக்க விளைவுகளோடு மன உளைச்சலோடு வாழ்ந்து கொண்டிருக்கும்போது, மனிதநேயமுடைய, மருத்துவத் தேர்ச்சி பெற்ற வேறொரு மருத்துவர் ஒருவர் இவருடைய இரத்தத்தை சரியாக பரிசோதித்து, _"உங்களுக்கு எய்ட்ஸ் இல்லை, உங்கள் தோலில் சூரியஒளி அதிகமாக பட்டதால் உங்கள் தோல் கறுப்பாக இருக்கிறது. அதை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். அந்த போலி மருத்துவரை நம்பி, பின்பற்றுவதை இன்றே நிறுத்துங்கள்"_ என்று கூறி அவரை பல்லாண்டுகால பயத்தினின்று விடுதலையாக்கினார். இதுபோலத்தான் வெளிநாட்டில் இருந்து வெள்ளை சருமத்தோடு கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து, தங்களை கடவுளுக்கு நெருக்கமான ஆன்மீக வித்துவான்களாக காண்பித்து, தங்களை 'உயர்சாதி' எனவும், இந்திய மண்ணின் மைந்தர்களை 'கீழ்சாதி' எனவும் பாகுபாடு கற்பித்து, தந்திரமாக ஏமாற்றி, அடிமைப்படுத்தி இவர்களை வெயிலில் நிறுத்தி கடுமையாக வேலை செய்ய வைத்தனர் நயவஞ்சக ஆரியர்கள். இதனால் இவர்களுடைய தோல் கறுப்பாகிவிட்டது. எனவே, இவர்களுடைய தலைமுறையினரும் தங்களை கீழ்சாதி என்றே நம்பிவிட்டனர் என்பதே உண்மை. ஆனால், பிராமணர்கள் இந்தியாவின் பூர்வக்குடி மக்களாகிய நம் மூதாதையர்களுடைய தலையின்மீது சுமத்திய இந்த இந்துத்துவ துர்நாற்ற குப்பையை கிறிஸ்தவர்களாக மாறி உண்மையை அறிந்தபின்பும் நாம் ஏன் கேவலமாக சுமந்துகொண்டு திரியவேண்டும்?

"இயேசு விடுவிக்கிறார்" என்று பாடிக்கொண்டே ஏன் இந்த அடிமைத்துவ சாபத்தைப் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கவேண்டும்? நாம் தலை முறைகளாக சுமந்துவந்த தாழ்வு மனப்பான்மை என்னும் ஆபத்தான மனநோயை நம் களங்கமற்ற பிள்ளைகளுக்குள் ஏன் புகுத்தவேண்டும்? இது நமக்கு அசிங்கமாக தெரியவில்லையா?
"நான் இந்துவாகப் பிறந்தேன் இந்துவாகவே இறப்பேன்" என்று அடம்பிடிக்கும் இந்துத்துவ நம்பிக்கையாளர்கள் சாதிப் பாகுபட்டை தெய்வீக போதனையாக நினைத்து கடைபிடிக்கிறார்கள். அவர்கள், "நான் இன்ன சாதி" என்று சொல்வதில் கொஞ்சமாவது நியாயமிருக்கிறது. ஏனென்றால், சாதியம் இந்துத்துவத்தால் உருவாக்கப்பட்டது. "சாதி பாகுபாட்டுக் கொள்கை தவறு அல்லவா! என்று இந்து சகோதரர்களிடம் கிறிஸ்தவர்களாகிய நாம் கேள்வி கேட்டால், "எங்கள் மதச் சட்டப்படி நாங்கள் சாதியை கடைபிடிக்கிறோம் ; இதை கேட்க நீங்கள் யார்? என்று நம்மிடம் எதிர்க் கேள்வி கேட்பார்கள். அதற்கு நம்மால் பதில் சொல்லமுடியாது. ஆனால், நாம் இயேசுவை இரட்சகராக அறிக்கையிட்ட அதே வாயாலேயே நம்மை 'சூத்திரன்', 'கீழ்சாதி', 'தலித்', 'தாழ்த்தப்பட்டவன்', 'சண்டாளன்', 'ஹரிஜன்' என்று கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நமக்கே பிடிக்காத ஒரு சாதிப்பெயரை நாம் ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும்?

மேல்சாதி என்று ஒரு கூட்டத்தினர் தங்களை பெருமைப்பட்டுக் கொள்வது தவறு என்று கூறும் நாம், நம்மை கீழ்சாதி என்று ஒத்துக்கொள்வதும் பெரிய குற்றமல்லவா! சாதி ஏற்றத்தாழ்வு மனப்பான்மையில் தலைமுறைகளாக நம்மை ஊற வைத்து, நம் சந்ததியை கூனி குறுக வைத்து, அவமானம் என்னும் கண்ணியில் இறுக வைத்து, தந்திரமாக தங்களை மேல்சாதியாக்கி கொண்டார்களே, அந்த போலி ஆன்மீகவாதிகளுடைய கொடிய சாதி ஆதிக்க வக்கிர மதவெறிக்கும், நிஜமான படைப்புக் கடவுளின் சமத்துவக் கொள்கைக்கும் அணு அளவுகூட சம்பந்தமில்லை என்பதை கிறிஸ்தவர்களாகிய நாம் முதன்முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நாமே நம்மை அப்படிப்பட்ட பெயருடையவர்கள் என்று ஒத்துக் கொண்டால், பிறர் நம்மை அந்த பெயர்களின் பொருட்டே புறக்கணிப்பதை தவறு என்று நாமே எப்படி குற்றம்சாட்ட முடியும்? அதாவது, நாமே நம்மை பள்ளன், பறையன், சக்கிலியன், என்று ஒத்துக் கொண்டால், "நீங்கள் என்னை பறையன் என அழைக்காதீர்கள், நீங்கள் அப்படி அழைப்பது எனக்கு வெட்கமாக இருக்கிறது, என் மனம் வலிக்கிறது, நீங்கள் என்னை காயப்படுத்துகிறீர்கள்" என்று பிறரை எப்படி நாம் குற்றம்சாட்டமுடியும்? அப்படி ஒத்துக்கொள்வது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது போன்றது அல்லவா! நாம் நடைபிணமாக வாழ்வதற்கு நாமே காரணமாகி விடுகிறோமே!

நாம் யாரைவிட கீழ்சாதியாகிவிட்டோம்?
நாமே நம்மை மதிக்காதபோது, பிறர் நம்மை மதிக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில் என்ன நியாயமிருக்கிறது? 'திருடக்கூடாது' என்று பொதுவான அரசாங்க சட்டம் இருந்தாலும், நமது வீட்டை நாம் பூட்டிப் பத்திரப்படுத்த வேண்டியது நமது கடமை அல்லவா! அதுபோல, பிறர் நம்மை கீழ்சாதி என அழைத்து நம்மை காயப்படுத்துவது அவர்கள் செய்யும் மிகப்பெருங்குற்றம்தான். அதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. ஆனால், நம்மை *நாமே* கீழ்சாதி என்று ஒத்துக்கொள்வது அதைவிட பெரிய தவறு அல்லவா? "நாங்கள் சேரியில் வாழ்கிறோம்; மாட்டுத்தோல் உரிக்கிறோம்; பறை அடிக்கிறோம்; மனித கழிவுகளை எங்கள் கைகளாலேயே அகற்றுகிறோம்; இதனாலேயே எங்களை எல்லாரும் 'கீழ்சாதி' என்று இகழ்கிறார்கள்" என நம்மில் பலர் கூப்பாடு போடுகிறோம். ஆனால், நாம் சேரியில்தான் வாழவேண்டும் என்றோ, மாட்டுத்தோல் உரிக்கத்தான் வேண்டுமென்றோ, பறை அடிக்கும் வேலையைத்தான் செய்யவேண்டுமென்றோ, மனித கழிவுகளை நம் கைகளால் அகற்றும் பணியைத்தான் செய்யவேண்டும் என்றோ இன்று யாராவது நம்மை கட்டாயப்படுத்துகிறார்களா சகோதரா? சென்னையில் பிராமணர்கள் குடியிருக்கும் அக்ரகாரங்கள் என்று கருதப்படும் மாம்பலம், நங்கநல்லூர், மயிலாப்பூர் போன்ற ஊர்களில் தலித்துகள் வீடு வாங்கவில்லையா? இங்கே யாரும் எங்கும் குடியிருக்கலாம். அதை எந்த கொம்பனும் தடுக்கமுடியாது. நாம் விரும்பாத ஓர் ஊரில் நாம் ஏன் குடியிருக்கவேண்டும்? இந்த சுதந்திர நாட்டில் யார் எந்த படிப்பையும் படிக்கலாம். எந்த வேலையையும் செய்யலாம்;. நமக்கு பிடிக்காத பணியை நாம் ஏன் செய்யவேண்டும்? பிறருக்கு தீங்கு இழைக்காமல் எந்த வேலையையும் நாம் செய்யலாமே!

ஒரு கறுப்பு நிற ஆப்பிரிக்கருடைய முகவெட்டை நாம் பார்த்தவுடன் "இவர் ஒரு ஆப்பிரிக்க கறுப்பர்" என்று கண்டுபிடித்துவிடலாம். ஒரு சீனருடைய முகவெட்டை நாம் பார்த்தவுடன் "இவர் ஒரு சீனர்" என்று கண்டுபிடித்துவிடலாம். ஆனால், இந்தியாவிலுள்ள தலித்துக்களை பார்த்தவுடனேயே, இவர்கள் தலித்துகள் என்று கண்டுபிடிக்க முடியாது. இவர்களுடைய வாயாலேயோ, சாதி சான்றிதழ் மூலமாகவோ "நான் தலித்து" என்று ஒத்துக்கொள்வதன்மூலம்தான் இவர்கள் இன்ன சாதி என்று பிறர் தெரிந்துகொள்கிறார்கள். கறுப்பாக இருக்கும் இந்தியர்கள் எல்லோரும் தலித்துகள் என்று சொல்லமுடியாது. பிராமணர்கள் என்று அழைக்கப்படுவோரில் மிகவும் கறுப்பாக இருப்போர் பலரை பார்த்திருக்கிறேன். தலித்துகள் என்று அழைக்கப்படுவோரில் வெள்ளை சருமம் உடையோரையும் நான் பார்த்திருக்கிறேன்.

உடல் உறுப்புகள் சரியாக இயங்கும் என்னைப் பார்த்து நானே 'நொண்டி' என்று கூறுவது என்னை பெற்ற என் தந்தையை அவமதிப்பது அல்லவா! அதுபோல, நம்மை நாமே 'கீழ்சாதி' என்று ஒத்துக் கொள்வது நம்மைப் படைத்த கடவுளை இழிவுபடுத்துவது அல்லவா! கிறிஸ்துவின் ஆன்மீக வலிமையால் மீட்கப்பட்ட பின்பும் தாழ்வு மனப்பான்மை என்னும் மனநோயிலிருந்து இன்னும் விடுதலையாகாமல் இருப்பது இயேசுவின் பெயருக்கு இகழ்ச்சி அல்லவா! தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தது நம் தவறல்ல. அது நம் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால், 'கீழ்சாதி' என்ற பட்டத்தோடே இறப்பது நம் தவறு அல்லவா!

நம் தலைக்குமேல் காகம் பறப்பதை நம்மால் தடைசெய்ய முடியாது. ஆனால், அந்த காகம் நம் தலையிலேயே கூடு கட்டுவதை நாம் சகிக்ககூடாது. கிறிஸ்தவராக மாறியபின்பும் நாம் திருச்சபைக்குள்ளும் இழிவுபடுத்தப்பட்டால் கிறிஸ்துவின் இரட்சிப்பால் என்ன பயன்?

தாழ்த்தப்பட்டவர்கள் அறிவாற்றல் குறைந்தவர்கள் என்னும் கூற்று மிகமிகத் தவறானது என்பதை 1200-க்கு 1176 மதிப்பெண்கள் எடுத்து நிரூபித்திருக்கிறாள் திருச்சி தங்கை அனிதா. தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த டாக்டர் அம்பேத்கர் வாழ்ந்த சமகாலத்தில் பிராமணர்களே அவரளவுக்கு படிக்கவில்லையே!

சாதி பெயர்மாற்றம் பயனற்றது
சில கிறிஸ்தவர்கள், "எங்களை 'பள்ளர்கள்' என்று அழைக்கக்கூடாது; நாங்கள் 'தேவேந்திரகுல வேளாளர் என்று பெருமையாக சொன்னார்கள். எனக்கு சிரிப்புதான் வந்தது. 'பள்ளர்' என்ற பெயரை எடுத்துவிட்டு 'தேவேந்திரகுல வேளாளர்' என்று பெயர் மாற்றியதால் நமது செல்வாக்கு உயர்ந்துவிட்டதா? அப்படி பெயர் மாற்றியதால், 'கிறிஸ்தவ நாடார்கள்' என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் நமக்கு பெண் கொடுத்து பெண் எடுப்பார்களா? 'பறையர்' என்ற பெயரை எடுத்துவிட்டு 'ஆதி திராவிடர்' என்ற புதுப்பெயர் சூட்டியதால் நமக்கு மரியாதை அதிகமாகிவிட்டதா? அப்படி பெயர் மாற்றியதால், 'கிறிஸ்தவ வன்னியர்கள்' என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் நமக்கு பெண் கொடுத்து பெண் எடுப்பார்களா? 'சக்கிலியர்' என்ற பெயரை எடுத்துவிட்டு 'அருந்ததியர்' என்ற புதுப்பெயர் சூட்டியதால் நமக்கு மரியாதை உயர்ந்துவிட்டதா? இந்த புதிய பெயர் வந்ததால் 'கிறிஸ்தவ ஆதி திராவிடர்கள்;' என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் நமக்கு பெண் கொடுத்து பெண் எடுப்பார்களா? 'அம்பட்டர், நாவிதர்' என்ற பெயர்களுக்கு பதில் 'மருத்துவர்' என்று பெயர் வைத்ததால் வாழ்க்கையில் என்ன வித்தியாசம் வந்துவிட்டது? தலித்துகளை காந்தியடிகள் 'ஹரிஜனங்கள்' என்று அழைத்ததால் தலித்துகளின் சமூக அந்தஸ்து உயர்ந்து விட்டதா? சிந்தியுங்கள். ஆக, இப்போது தேவையானது சாதியின் பெயர்மாற்றமல்ல. சாதியே அடியோடு ஒழிய வேண்டும்.

கிறிஸ்தவர்களில் சிலர், "நான் கிறிஸ்தவ தலித் விடுதலை இயக்கத்தில் இருக்கிறேன்" என்று சொல்கிறார்கள். இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. கிறிஸ்தவனானபின் எப்படி உங்களை நீங்கள் 'தலித்' என்று கூறுகிறீர்கள்? கிறிஸ்தவ மறைநூலுக்கும் 'பள்ளர்', 'சக்கிலியர்', 'பறையர்' என்னும் சாதிப் பெயர்களுக்கும் சம்பந்தமே இல்லையே என்று கிறிஸ்தவ வீதிகளில் இறங்கி முழங்கவேண்டிய நாம், 'கிறிஸ்தவ தலித்துகள்' என்று நம்மை நாமே அடையாளப் படுத்துவது, கடவுளின் முகத்தில் கரி பூசுவதுபோலல்லவா இருக்கிறது! யாரோ ஒருவர் வரலாற்று அறிவில்லாமல் தன்னைத்தானே 'மேல்சாதி' என்று பிதற்றுகிறார் என்பதற்காக நாம் ஏன் நம்மைநாமே 'கீழ்சாதி' என்று ஒத்துக்கொள்ள வேண்டும்? மனிதன் தோன்றிய வரலாற்றை தெரியாதவர்கள் தங்களை 'பிராமணர்' என்றும், 'முதலியார்' என்றும் அழைத்துக்கொள்கிறார்கள் என்பதற்காக நீங்கள் ஏன் உங்களை 'பள்ளர்' என்றும், 'பறையர்' என்றும் அழைக்க வேண்டும்?

'தலித்' என்ற வெறியுடைய சில 'கிறிஸ்தவர்கள்' என்னை 'தலித் எதிரி' என்கிறார்கள். அதனால் எனக்கு சிறிதும் கவலையில்லை. ஏனென்றால், என்னைப்பற்றி தெரியாதவர்கள்கூட இவர்களுடைய தப்பறையான பதிவுகள்மூலம் என்னுடைய பெயரைத் தெரிந்துகொண்டு நமது  காணொளிகளைப் பார்த்து உண்மையைத் தெரிந்து கொள்ள இவர்கள் வழி வகுக்கிறார்கள். கடவுள் எல்லாவற்றையும் நன்மையாக முடியப் பண்ணுகிறார்.
ஆவியாரின் தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டு, கடவுளிடத்தில் அன்புகூர்பவர்களுக்குச் சகலமும் நன்மைக்காகவே நடக்கிறது (ரோமர் 8:28). கடவுளுக்கே நன்றி.

அன்புக்குரியவர்களே! நாம் உயிரோடிருக்கும் நாட்களிலேயே இந்த சாதிப்பிசாசுக்கு சமாதிகட்டாவிட்டால், நாம் கிறிஸ்துவைப் பற்றிய கல்வி கற்றதனால் எந்த பயனும் இல்லை. திருச்சபை என்னும் அழகிய நந்தவனம் சாதி சாக்கடையால் பொலிவிழந்துவிட்டது. நாம்தான் இறை அன்போடு சீர்செய்யவேண்டும். அதற்கு சில தியாகங்களை சகித்தாக வேண்டும்.
அறிவு பற்றாக்குறையால் இந்நாள்வரை உண்மை தெரியாமல் இந்த சாதிச் சிறைச்சாலையில் வாழ்ந்து விட்டோம். நம் பிள்ளைகளையாவது இந்த சாதிப் பேயின் கோரப்பிடியிலிருந்து கவனமாக காப்பாற்றி அவர்களை சுதந்திர பறவைகளாக வாழவிடுவோம்.

இவ்வுலகில் பிறந்த நாம் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள்போல ஒற்றுமையாக வாழ பிறந்தவர்கள். இதற்கு தடையாக நிற்கும் வர்ணாசிரம அதர்மத்தின் சுவடுகளையே நாம் புறக்கணிக்கவேண்டும்.
கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்களை 'கீழ்சாதி', 'பாவி', 'ஏழை', 'முட்டாள்', 'சபிக்கப்பட்டவன்', 'புழு', 'பூச்சி' என்றெல்லாம் அழைத்துக்கொள்கிறார்கள். அப்படி அழைப்பதுதான் 'மனத்தாழ்மை' என்று பலர் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். ஆனால், நம் வாயாலேயே நம்மை இப்படிப்பட்ட பட்டப் பெயர்களால் இழிவுபடுத்துவது சாத்தானுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்பதை இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகள் நுட்பமாக புரிந்துகொள்ளவேண்டும்.

நம்மை படைத்து, நம் பாவங்களிலிருந்து நம்மை மீட்ட கடவுளின் நீதி அறிவுரை புத்தகமாகிய பைபிள் நம்மை யார் என்று சொல்கிறதோ அந்த ஆள்தான் நாம் என்பதை உறுதியாக நம்பவேண்டும். இயேசுவால் மீட்கப்படும்முன் நாம் பாவிகளாக இருந்தது உண்மைதான். ஆனால், இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட உடனேயே 'நீதிமான்கள்' என்னும் பெயர் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் அக்கால திருச்சபையாருக்கு கடிதம் எழுதும்போது, "தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாய் இருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது (எபேசியர் 1:1),
கொலோசெ பட்டணத்தில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாய் இருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது (கொலோசெயர் 1:2) என்று குறிப்பிடுகிறார். இங்கு விசுவாசிகளை திருத்தூதர் பவுல் 'பரிசுத்தவான்கள்' என்று அழைக்கிறார். கத்தோலிக்க திருச்சபை இறந்தவர்களுக்கு 'பரிசுத்தவான்கள்' அதாவது 'புனிதர்கள்' (Saints) என்னும் பட்டத்தை கொடுக்கிறது. ஆனால், திருத்தூதர் பவுல் உயிரோடிருந்த விசுவாசிகளை 'புனிதர்கள்' (Saints) என்று அழைக்கிறார்.

நாம் அவருக்குள் (கிறிஸ்துவுக்குள்) தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை (கிறிஸ்துவை) நமக்காகப் பாவமாக்கினார் (2கொரிந்தியர் 5:21) என்ற வசனத்தில் 'கடவுள் எவ்வளவு நீதி உடையவரோ, அவ்வளவு நீதி உடையவர்களாக கடவுள் நம்மை பார்க்கிறார்' என்ற பொருள்பட திருத்தூதர் பவுல் கூறுகிறார்.

சகோ பெர்க்மான்ஸ் அவர்கள் பாடும்போது, "நீதிமான் நான்; இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான்.... என்றும், "இனி நான் பாவியல்ல.... என்றும் பாடுகிறார். நீதிமான், பரிசுத்தவான் என்னும் பெயர்கள் நாம் தூய்மையாக வாழ்வதனால் நமக்கு கிடைத்த பெயர்களல்ல; நாம் பாவம் செய்யாமல், தூய்மையாக வாழவேண்டும் என்பதற்காக கடவுள் நமக்கு கொடுத்த பெயர்கள்.
அவரிடம் (இயேசுவிடம்) நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார் (யோவான் 1:12) என்று திருத்தூதர் யோவான் கூறுகிறார்.

நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால் தான் நம்மையும் அறிந்து கொள்ளவில்லை (1யோவான் 3:1). இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே (கலாத்தியர் 4:7) என்று புனிதநூல் கூறுகிறது. மேற்கண்ட வசனங்களிலிருந்து கிறிஸ்துவின் மூலம் நாம் கடவுளின் பிள்ளைகளாக இருக்கிறோம் என்று அறிகிறோம். கடவுளின் பிள்ளைகளுக்குள் 'மேல்ஜாதி பிள்ளைகள்' என்றும் 'கீழ்ஜாதி பிள்ளைகள்' என்றும் வேறுபாடுகள் இருக்கமுடியாது.
நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்தவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி (1பேதுரு 2:9) என்று பேதுரு கூறுகிறார்.

Comments

Popular posts from this blog

சனாதன தர்மம்

கிறிஸ்தவத்தின் அடிப்படை

சாதியம் இந்துத்துவ கொள்கை