சாதிவெறி இந்துக்களால் கொடுமைப்படுத்தப்படும் தலித் இந்துக்களே கிறிஸ்தவத்தை புறக்கணிப்பது ஏன்?
*சாதிவெறி இந்துக்களால் கொடுமைப்படுத்தப்படும் தலித் இந்துக்களே கிறிஸ்தவத்தை புறக்கணிப்பது ஏன்?*
கிறிஸ்தவம் சாதியத்தை எதிர்ப்பதால், சாதி பாகுபாடுகளை தங்கள் 'தர்மமாக' கொண்டுள்ள பிராமணர்கள் கிறிஸ்தவத்தை எதிர்ப்பதை நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால், பிராமணர்களின் சாதி வெறியால் கொடுமைப்படுத்தப்படும் தாழ்த்தப்பட்டவர்களே கிறிஸ்தவத்தை ஏன் புறக்கணிக்கிறார்கள்? இந்த கேள்விக்கு தெளிவான பதிலை கண்டுபிடிக்கவேண்டும்.
ஒருமுறை ஒரு இந்துத்துவ நண்பரிடம், _"உங்களை 'கீழ்சாதி' என்றும் 'தீண்டத்தகாதவர்' என்றும் இழிவுபடுத்தி, கொடுமைப்படுத்தும் இந்து மதத்தில் நீங்கள் தொடர்வது நியாயமா?"_ என்று கேட்டேன். அதற்கு அவர், _"நியாயமில்லைதான் ஐயா; ஆனால், நீங்கள் பின்பற்றும் கிறிஸ்தவத்துக்கு நான் மாறலாமென்றால், நான் பின்பற்றும் இந்துத்துவத்திலுள்ள சாதிப் பாகுபாடுகள் அப்படியே உங்களுக்குள்ளும் இருக்கிறதே! நான் என் உறவினர்களின் எதிர்ப்பை சகித்துக்கொண்டு உங்கள் மதத்துக்கு வருவதனால் எனக்கு என்ன பயன்?"_ என்று கேட்டார்.
இந்துத்துவாவில் எவ்வளவுதான் தாழ்த்தப்பட்டவர்கள் இழிவுபடுத்தப்பட்டாலும், கொடுமைப்படுத்தப்பட்டாலும் வேறுவழியின்றி ஆன்மீக அநாதைகளாக, சுயமரியாதை இல்லாமல் _''நாங்களும் இந்துக்கள்தான்"_ என்று அடம்பிடித்துக்கொண்டு பரிதாபமாக அங்கேயே இருப்பதற்கு காரணம் என்ன என்பதை கிறிஸ்தவர்கள் யோசிக்கவேண்டும். அந்த மக்கள் அந்த துன்பச் சிறைச்சாலையை விட்டு வெளியேறமுடியாத காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ச்சி செய்யவேண்டும். தங்களை கடைமட்ட கீழ்சாதியைவிட தாழ்ந்த சாதி என்று கூறும் சாதி அடிமைத்தன கொள்கையை இந்துத்துவ மதத்தினர் இறைக்கட்டளையாக நம்பி பின்பற்றுவதைவிட கொடுமையான பரிதாபம் இந்த உலகில் வேறு என்ன இருக்கமுடியும்?
இந்துத்துவ சாதிவெறி கொடுமைகளை அனுபவித்த, அனுபவிக்கின்ற அந்த மக்கள் தங்கள் மனநிம்மதியைத் தேடி அன்பே உருவான கிறிஸ்துவின் மார்க்கத்துக்கு வராத காரணம் என்ன? அந்த அடிமை நுகத்தைவிட்டு வெளியேறி, விடுதலை நாயகன் இயேசுவை அவர்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளாத காரணம் என்ன?
இந்துத்துவ சாதியால் பாதிக்கப்பட்டவர்களே கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாததற்கு ஒற்றைக் காரணம்தான் இருக்கிறது. அது வேறு ஒன்றுமல்ல. *இந்துத்துவாவில்* இருக்கும் அசிங்கமான சாதி பாகுபாடுகள் *கிறிஸ்தவத்திலும்*
அப்படியே இருக்கிறது என்பதை அந்த மக்கள் தெளிவாக தெரிந்துவைத்திருக்கிறார்கள்.
குமரி, நெல்லை, கோவை போன்ற மாவட்டங்களில் கிறிஸ்தவர்களுக்கு இந்துக்களிடமிருந்து எதிர்ப்புகளும் துன்பங்களும் அதிகமாக வருகின்றன. அதன் காரணம் என்ன? எந்த மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவர்கள் அதிகமாக சாதிவெறி உடையவர்களாக இருக்கிறார்களோ அந்த மாவட்டத்திலுள்ள, சக இந்துக்களுடைய சாதிவெறியால் பாதிக்கப்பட்ட *தலித் இந்துக்களே* கிறிஸ்தவர்களின் மதமாற்ற முயற்சிகளுக்கு எதிர்த்து நிற்கிறார்கள். இது எனது ஆய்வின் முடிவு.
உயர்நீதிமன்ற நீதிபதி *அரிபரந்தாமன்*, _"இந்து மதத்தின் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்ட சில தலித் மக்கள் அந்த பிரச்சனையிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று நம்பி கிறிஸ்தவத்தில் இணைந்தனர். ஆனால், கிறிஸ்தவத்திலும் அவர்கள் சாதி பாகுபாட்டால் அவமதிக்கப்படுவது வேதனையளிக்கிறது"_ என்று தெரிவித்துள்ளார்.
_நிறைவானது வரும் போது அரைகுறையானது *ஒழிந்துபோகும்.* (1கொரிந்தியர் 13:10)_ என்று இறைவார்த்தை நமக்கு கற்றுத் தருகிறது.
*மிக்ஸி (Mixie)* கண்டுபிடிக்கப்பட்டவுடன் *அம்மிக்கல்* ஒழிந்தது. *கிரைண்டர் (Grinder)* செயற்பாட்டுக்கு வந்தவுடன் மக்கள் *ஆட்டுரல்* பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார்கள். அதுபோல தெய்வீக அன்பை போதிக்கும் கிறிஸ்தவம் இந்த மண்ணில் மலர்ந்தவுடன் சாதி ஒழிந்திருக்கவேண்டுமே! குறைந்தபட்சம் *சாதியத்தால் பாதிக்கப்பட்ட இந்து சகோதரர்களாவது* சாதியத்தை உருவாக்கி வளர்க்கும் இந்துத்துவாவை விட்டு விலகி கிறிஸ்துவின் மீட்பை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டுமல்லவா! ஏன் அவர்களுக்கு கிறிஸ்தவம் பிடிக்கவில்லை? நிறைவான அன்பு கிறிஸ்தவத்தின்மூலம் வெளிப்படவில்லை என்பதே ஒரே பதில்.
எந்த மதவாதிகள் சாதி உணர்வு உடையவராக இருந்தாலும் மக்கள் புரிந்துகொள்வார்கள். ஆனால், அன்பே உருவான *இயேசுநாதர்* என்னும் கருணாமூர்த்தியை கடவுளாக வணங்கும் கிறிஸ்தவர்களே சாதி உணர்வாளர்களாக இருப்பதை யாரால்தான் புரிந்துகொள்ள இயலும்? சாதியம் என்னும் தேசிய கொடுமையிலிருந்து இயேசு என்னும் உலக இரட்சகரால் விடுதலை கொடுக்கமுடியாது என்ற முடிவுக்கு வந்துதான் கிறிஸ்தவத்தை அவர்கள் தேர்வுசெய்யவில்லை.
_சத்தியத்தை அறிவீர்கள்; சத்தியம் உங்களை *விடுதலையாக்கும்* (யோவான் 8:32),_
_குமாரன் (இயேசு கிறிஸ்து) உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே *விடுதலையாவீர்கள்* (யோவான் 8:36),_
_கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே *விடுதலை உண்டு* (2கொரிந்தியர் 3:17)_
என்ற வசனங்களை மேற்கோள் காட்டி *நற்செய்தி கூட்டங்கள், பேரின்ப பெருவிழாக்கள், சமாதான பெருவிழாக்களில்* பலமணி நேரம் பிரசங்கம் செய்யும் போதகர்கள் நம்மிடையே பலர் உண்டு. _"இயேசு கிறிஸ்து பாவத்திலிருந்து, சாபத்திலிருந்து, நோய்களிலிருந்து விடுதலையை தருகிறார்"_ என்று பல மேடைகளில் பேசப்பட்டு நான் என் சொந்த காதுகளால் கேட்டிருக்கிறேன். ஏதோ பிரமாண்டமான விடுதலையை கிறிஸ்தவர்கள் உறுதியளிக்கிறார்களே! என்று எண்ணி கிறிஸ்தவர்களின் கூடுகை அழைப்பிதழை மதித்து, பலர் கிறிஸ்தவ கூட்டங்களில் ஆர்வமுடன் பங்கெடுக்கிறார்கள்; பாடல்களை கேட்கிறார்கள், நடனங்களை காண்கிறார்கள். போதனைகளை கேட்கிறார்கள். ஆனால், தங்கள் மனதை அரித்துக்கொண்டிருக்கும் இந்துத்துவ சாதி அடிமைத்துவத்திலிருந்து விடுதலை தரும் வார்த்தைகள் கிறிஸ்தவர்களால் பேசப்படவில்லையே என்னும் விரக்தியிலேயே பலர் ஏமாற்றத்தோடு திரும்புகின்றனர். விரக்தியின் உச்சக்கட்டத்தில் பலர் *கடவுளே இல்லை* என்னும் பரிதாப முடிவுக்கே வந்துவிடுகின்றனர்.
_"பாவம் செய்யக்கூடாது"_ என்று கிறிஸ்தவ அறிஞர்கள் அடிக்கடி பேசி மக்கள் கேள்விப்படுகிறார்கள். பாவம் என்றால் என்ன? செய்யத்தகாததை செய்வதும், செய்யவேண்டியவற்றை செய்யாதிருப்பதும்தானே பாவம்! அநீதியெல்லாம் பாவமல்லவா! பிறருக்கு தீங்கு இழைப்பதெல்லாம் பாவம்தானே!
கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட சகமனிதனை, இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட சகவிசுவாசியை, மறுபடியும் பிறந்த சக சீடனை *கீழ்சாதி, அந்நியசாதி* என்று புறக்கணிப்பது பெரும்பாவம் அல்லவா! பிறப்பின் அடிப்படையில் சகமனிதனை அவமதிப்பது பெரும்பாதகமல்லவா!
ஒரு மனிதனுடைய பிறப்புக்கு காரணம் அவரல்ல. இந்துத்துவாவால் அடிமைப்படுத்தப்பட்ட ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை பிறப்பதை தவறு என்று சொல்லமுடியுமா? ஒரு மனிதன் ஏழையாக பிறந்ததற்கோ, கறுப்பான தோலோடு பிறந்ததற்கோ அவர் பொறுப்பேற்கமுடியுமா?
சாதிப் பாகுபாட்டு சிந்தையை பாவங்களின் பட்டியலில் கடவுள் சேர்க்கவில்லையா?
_*பிரிவினைகள், மார்க்கபேதங்கள்* (கலாத்தியர் 5:20)_ இவையெல்லாம் சாத்தானால் தூண்டப்படுபவை அல்லவா!
_"இயேசு கிறிஸ்து என் நோய்களை குணமாக்கினார்; வறுமையிலிருந்து, கடன்களிலிருந்து விடுவித்தார்; குடும்ப பிரிவினையிலிருந்து காத்தார்; தோல்வியிலிருந்து தூக்கினார்; தற்கொலை சிந்தையிலிருந்து இரட்சித்தார்; கொலை வெறியிலிருந்து விடுவித்தார்; குடிவெறியிலிருந்து நிவாரணம் தந்தார்"_ என்று சாட்சி சொல்வோர் நம்மிடையே பலர் உண்டு. அதற்காக இறைவனுக்கு உள்ளம் கனிந்து நன்றி செலுத்துகிறேன். ஆனால், எனக்கு அறிவு தெரிந்தநாள்முதல் _"சாதி உணர்வு என்னும் முக்கியமான உளவியல் பிரச்சனைக்கு இயேசு கிறிஸ்துவால் விடுதலை தரமுடியும்"_ என்று யாரும் எங்கும் பிரசங்கம் செய்து நான் பார்த்ததுமில்லை. _"நான் சாதி உணர்வு உடையவனாக இருந்தேன்; இயேசு கிறிஸ்து சாதி உணர்விலிருந்து என்னை விடுவித்தார்"_ என்று யாரும் அறிக்கை விடுத்து நான் கேட்டதுமில்லை. அப்படியானால் இந்த முக்கியமான ஆன்மீக பிரச்சனைக்கு தீர்வுகாணும் வலிமை உலக மீட்பர் இயேசு கிறிஸ்துவுக்கு இல்லையா என்னும் கேள்வி சாதியால் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் மேலோங்குகிறது. அந்த விரக்தியோடேயே பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள்.
ஒருமுறை ஒரு இந்து சகோதரன் கிறிஸ்தவ நற்செய்தியாளர் ஒருவரை நோக்கி, _"கிறிஸ்தவர்கள் சாதி வெறியர்களாக இருக்கிறார்களே சார்! நாங்கள் எவ்வளவு சாதி பாகுபாட்டை கடைபிடிக்கிறோமோ, அவ்வளவு நீங்களும் சாதிப் பாகுபாட்டை கடைபிடிக்கிறீர்கள். இந்துக்களிடம் இருக்கும் சமூக அவலங்கள் கொஞ்சம்கூட குறையாமல் உங்களிடமும் இருக்கிறது! பிள்ளையாரையும் பெருமாளையும் கும்பிடும் எங்களிடம் இல்லாத ஒரு சிறப்பான தனித்துவம், இயேசுவை வணங்கும் உங்களிடம்தான் இருக்கிறது என்று ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லுங்கள்"_ என்று சாதாரணமாக கேட்டார். உடனே நற்செய்தியாளர் அவரைப் பார்த்து, _"நீங்க கிறிஸ்தவர்களைப் பார்க்காதீங்க சார்; கிறிஸ்துவைப் பாருங்க"_ என்று சொன்னார். உடனே அவர், _"செத்துப்போன காமராஜர் நல்லவர் ஆனதுனால, அவர் சார்ந்திருந்த கட்சிக்கு ஓட்டுபோட சொல்றீங்களா ஐயா? இயேசுநாதர் நல்லவராக வாழ்ந்தார், நல்ல போதனைகளை சொன்னார் என்பதற்காக சாதிவெறிபிடித்த இந்த போலிக் கிறிஸ்தவத்தில் என்னை சேர்த்துவிட பார்க்கிறீர்களே ஐயா! இது உங்களுக்கு அநியாயமாக தெரியவில்லையா? கிறிஸ்தவத்துக்கு மதம் மாறுவதால் எனக்குள் என்ன மாற்றம் உருவாகப் போகிறது? இந்துக்களுக்கு சாதிப்படிமான முறை கடமையாக்கப்பட்டுள்ளதால் நாங்கள் அதை கடைபிடிக்கிறோம். ஆனால், கிறிஸ்தவத்துக்கும் இந்துத்துவ சாதிக்கும் என்ன சம்பந்தம்? விகிதாச்சாரப்படி வரதட்சணை கொடுமை வழக்குகளை கிறிஸ்தவர்கள் பதிவு செய்யும் அளவுக்கு இந்துக்கள் பதிவு செய்வதில்லையே சார்! பெரும்பான்மை மக்களாகிய இந்துக்களைவிட 2.3% இருக்கும் கிறிஸ்தவர்கள்தான் அதிகமாக விவாகரத்து செய்கிறார்கள். உங்களைவிட எந்தவிதத்தில் நாங்கள் தரம் குறைந்தவர்கள் என்று எங்களை மதமாற்றம் செய்ய வந்திருக்கிறீர்கள்? முதலில் உங்களை சரி செய்தபின்தானே பிறரை மாற்ற முயற்சி செய்யவேண்டும்!"_ என்று கேட்கிறார்.
அவர் கேட்ட கேள்வி எனக்கு அர்த்தமற்றதாக தெரியவில்லை. ஏனெனில், நம்மை ஏற்றுக்கொள்பவர்கள்தான் நம் கடவுளை ஏற்றுக்கொள்வார்கள் (மத்தேயு 10:40) என்றுதான் கிறிஸ்தவர்கள் போற்றும் பைபிளும் சொல்கிறது.
*நமது கண்ணிலுள்ள மரத்துண்டை நீக்கியபின்தானே பிறருடைய கண்ணிலுள்ள தூசியை எடுக்கவேண்டும்! (மத்தேயு 7:3-5).* அருவருக்கத்தக்க முடைநாற்றமெடுக்கும் பண்புகளோடு நாமே புறக்கணிக்கப்பட்டு கிடக்கும்போது, நம் மார்க்கம் புறக்கணிக்கப்படுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? சமத்துவம் என்பது மேன்மையானது. ஏற்றத்தாழ்வு என்பது இழிவானது அல்லவா! *கிறிஸ்தவர்களே ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளாமல் காட்டுமிராண்டிகளைப்போல கடித்துக் கொண்டிருக்கும்போது இந்துக்கள் கிறிஸ்தவர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?*
நித்தியானந்தா என்ற இந்துத்துவ போதகர் இந்துத்துவ கொள்கைப்படி திருவண்ணாமலையிலுள்ள *"முதலியார்"* என்னும் சாதியில் பிறந்தவராம். அவருடைய மதக் கொள்கைப்படி அந்த சாதிப்பெயரை அவருடைய பெயருக்குப்பின் எழுத அவர் உரிமை உடையவர். ஆனால் அவர் தன் பெயரை குறிப்பிடும்போது *'நித்தியானந்தா முதலியார்'* என்று எங்குமே எழுதி நான் பார்த்ததில்லை. ஆனால், சாதிக்கும் கிறிஸ்தவத்துக்கும் கொஞ்சம்கூட சம்பந்தம் இல்லாமல் இருக்கும் நிலையில் கிறிஸ்தவ போதகர் தன் பெயருக்குப்பின் *'முதலியார்'* என்று எழுதுகிறார்.
மனிதன் எப்படி தோன்றினான் என்ற வரலாறு தெரியாத இந்துத்துவ நம்பிக்கையாளர்கள், தங்களை உயர்ந்தவர்கள் என்று காண்பிப்பதற்கென்று, தற்பெருமையோடு தங்கள் பெயருக்குப்பின் சாதி பெயர்களை எழுதுகிறார்கள். ஆனால், சாதியம் என்பது பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலியாக்கிய கோரப்பேய் என்று தினசரி செய்தித்தாள் மூலமாகவும், தொலைக்காட்சி மூலமாகவும் தெரிந்த கிறிஸ்தவர்கள் தங்கள் பெயருக்குப்பின் *நாடார், செட்டி, பிள்ளை, முதலி* என்று எழுதுவது எவ்வளவு அநியாயமாக இருக்கிறது! அந்த சமூக கொடுமைக்கு கிறிஸ்தவம் துணை போவதைத்தானே இது காட்டுகிறது. இதை பார்க்கும்போது, கிறிஸ்தவர்கள் இந்துத்துவ சாமியார்களைவிட சாதி உணர்வு அதிகமாக உடையவர்கள் என்றல்லவா தோன்றுகிறது! அறிவார்ந்த, சமூக விஞ்ஞானம் தெரிந்த, முற்போக்கு சிந்தனையாளர்கள் கூட பலர் இதனாலேயே இடறிப் போயிருக்கிறார்களே!
கிறிஸ்தவ திருச்சபையிலுள்ள ஒரு பையனுக்கு அதே கிறிஸ்தவ போதனையை பின்பற்றும் ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்யும்போது, சபைக்குள் இருக்கும் சாதி உணர்வுள்ள 'பக்த சிரோமணிகள்', பையன் *வேறுசாதி* என்று கூறி ஈவு இரக்கமின்றி அந்த திருமணத்தை தடை செய்துவிடுகிறார்கள். இதில் பெரிய மனவேதனை என்னவென்றால் வேதாகம கல்லூரியில் பயின்ற அந்த *போதகரே* இந்த பாகுபாட்டு பிரிவினைகளுக்கு உடந்தையாக இருக்கிறார். உண்மையான கடவுளை வணங்கும் மக்கள் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகளாக, ஒற்றுமையாக இருந்தால்தானே பிறர் நம்மை மதிப்பார்கள்! அன்பின் மார்க்கத்தாருக்குள்ளேயே இப்படி சாதி பேதம் இருந்தால், இந்த மார்க்கத்தை அறிவார்ந்த நடுநிலை மக்கள்கூட மதிக்கமாட்டார்களே! கடவுள் உண்டா இல்லையா என்று தெரியாத ஒரு இளைஞனிடம் இருக்கும் மனமுதிர்ச்சிகூட வேதாகம கல்லூரிகளை நடத்தும் 'மறைநூலை கரைத்துக் குடித்த' கிறிஸ்தவ வேதபண்டிதர்களிடமே இல்லையே! கிறிஸ்தவம் சாதி சாக்கடைக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறது என்று பிறர் குறை சொல்லும் அளவுக்கு கிறிஸ்தவம் நாறிப்போய் கிடக்கிறதே! கடவுளைப் பற்றி தெரியாதவர்களிடம் இருக்கும் அடிப்படை மனிதநேயம்கூட பெரும்பான்மையான கிறிஸ்தவ போதகர்களிடம்கூட இல்லை என்று சொல்கிறேன்.
கிறிஸ்தவர்கள் சாதி பார்த்து திருமணம் செய்வதால், இந்துத்துவா விதைத்த சாதி என்னும் நச்சுச்செடியை உலக இரட்சகராலேயே அழிக்க முடியாது என்ற கருத்து மக்களிடையே பரவி, கிறிஸ்தவத்தைப் பற்றிய வெறுப்பு அதிகமாகிவிட்டது.
பெரும்பான்மையான கிறிஸ்தவ 'போதகர்கள்' சாதி உணர்வு உடையவர்களாக இருப்பதனால் அவர்களைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் 'சாதி உணர்வு தவறல்ல' என்று நினைத்து, குற்ற மனசாட்சியே இல்லாமல் அதைக் கடைபிடிக்கிறார்கள். ஆனால், இயேசு கிறிஸ்து சொல்கிறார், _*"இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில், அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே. (மத்தேயு 7:13,14).*_ எனவே, பெரும்பான்மையானவர்கள் சொல்கிறார்கள் என்பதனால் அது சரியாகத்தான் இருக்கும் என்று உறுதிசெய்யமுடியாது. ஒரு போதகர் போதிக்கும் எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு கீழ்ப்படிவது அறிவாண்மை அல்ல. அவர்கள் சொல்வது மறைநூலோடு ஒத்துப்போகிறதா என்று ஆராயவேண்டும். அந்த முதிர்ந்த மனப்பான்மை கிறிஸ்தவர்களுக்கு வேண்டும்.
இஸ்ரயேல் நாட்டிலே ஆயிரக்கணக்கில் *மறைநூல் அறிஞர்களும், ஆன்மீக குருக்களும்* வலம்வரும்போது இயேசு கிறிஸ்து இஸ்ரயேல் மக்களைப் பார்த்து, *ஆயனற்ற ஆடுகள்* என்று அழைத்தார். அதுபோல இன்று இந்தியாவிலும் வேதாகமக் கல்லூரிகளை நடத்தும் போதக பீரங்கிகளும், இறையியலில் டாக்டரேட் பட்டம் பெற்ற அறிவுஜீவிகளும் ஆயிரக்கணக்கில் வலம் வந்தாலும், பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் *ஆயனற்ற ஆடுகளாகத்* தான் இருக்கிறார்கள்.
கிறிஸ்தவர்களுக்குள் சாதியே இல்லை என்று அண்டப்புளுகை அள்ளிக்கொட்டும் இமாலயப் பொய்யர்களும் கிறிஸ்தவர்களிடையே உண்டு. ஒருமுறை ஒரு திருநெல்வேலி கிறிஸ்தவர் என்னிடம், _"கிறிஸ்தவர்களுக்குள் சாதியே இல்லையே; இல்லாத சாதியை எப்படி ஒழிக்கமுடியும்?"_ என்று கேட்டார். உடனே நான், _"உங்கள் பள்ளி சான்றிதழில் 'கிறிஸ்தவ நாடார்' என்று எழுதப்பட்டிருப்பது சாதிப்பெயர் இல்லையா? அது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா சார்?"_ என்று கேட்டேன்.
இந்துத்துவ சாதிக் கொள்கையைக் கடைபிடிக்கும் 'கிறிஸ்தவர்கள்' செய்தித்தாளில் *மணமக்கள் தேவை* என்னும் பகுதியில் *கிறிஸ்தவ நாடார் தேவை, கிறிஸ்தவ ஆதி திராவிடர் தேவை, கிறிஸ்தவ வெள்ளாளர் தேவை* என்று மொத்த உலக மக்களும் பார்க்கும்படி செய்தித் தாள்களில் அசிங்கமாக விளம்பரம் செய்கிறார்கள். கிறிஸ்தவர்களுக்குள் சாதி இல்லையானால் ஏன் இப்படி விளம்பரம் செய்யவேண்டும்?
கிறிஸ்தவ திருமண தகவல் மையங்களில் *ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி கோப்புகள் (Files)* வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்களுக்குள் சாதி இல்லையானால் ஏன் இப்படி பிரித்து வைக்கவேண்டும்?
2018-ம் ஆண்டு மே மாதம் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள குமாரநல்லூர் என்னும் ஊரிலுள்ள கெவின் ஜோசப் என்னும் 'தாழ்த்தப்பட்ட' வகுப்பைச் சார்ந்த 23 வயது இளைஞன் 'உயர்சாதி' என்று அழைக்கப்படும் நீனு என்ற கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்தார். இந்த திருமணத்தை பெண்ணின் பெற்றோர் விரும்பாததால் மணமகனை ஈவு இரக்கமின்றி கொலை செய்துவிட்டனர். கிறிஸ்தவர்களுக்குள் சாதி இல்லையானால் ஏன் இப்படி சாதி ஆணவக் கொலை நடக்கிறது?
திருநெல்வேலியிலுள்ள *நாஞ்சாங்குளம்* என்ற ஊரில் ஒரே தெருவில் இரண்டு CSI சபைகள் இருக்கின்றன. ஒன்று *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*
திருநெல்வேலியிலுள்ள *டக்கரம்மாள்புரம்* என்ற ஊரில் ஒரே தெருவில் இரண்டு CSI சபைகள் இருக்கின்றன. ஒன்று *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*
சிவகாசியிலுள்ள *சாட்சியாபுரம்* என்ற ஊரில் ஒரே தெருவில் இரண்டு CSI சபைகள் இருக்கின்றன. ஒன்று *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*
மதுரையில் திருமங்கலம் என்ற ஒரே ஊரில் இரண்டு CSI சபைகள் உள்ளன. ஒன்று *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*
ஈரோடு மாவட்டம் *கோபி செட்டிப்பாளையத்தில்* ஒன்றாய் இருந்த CSI சபை *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரிய சபை* என்றும் *தாழ்த்தப்பட்டோர் சபை* என்றும் இரண்டாக பிரிந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் *சத்தியமங்கலத்தில்* ஒன்றாய் இருந்த CSI சபை *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரிய சபை* என்றும் *தாழ்த்தப்பட்டோர் சபை* என்றும் இரண்டாக பிரிந்துள்ளது.
*திருப்பூரில்* ஒன்றாய் இருந்த CSI சபை *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரிய சபை* என்றும் *தாழ்த்தப்பட்டோர் சபை* என்றும் இரண்டாக பிரிந்துள்ளது.
உடுமலைப்பேட்டை என்ற ஒரே ஊரில் இரண்டு CSI சபைகள் உள்ளன. ஒன்று *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*
பொள்ளாச்சி என்ற ஒரே ஊரில் இரண்டு CSI சபைகள் உள்ளன. ஒன்று *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*
கிறிஸ்தவர்களுக்குள் சாதிப்பிரிவினைகள் இல்லையானால், ஏன் சபைகள் இப்படி சாதி அடிப்படையில் பிரிந்துகிடக்கவேண்டும்? இது சாதி உணர்வையும் தாண்டி தீண்டாமைக் கொடுமை அல்லவா! இந்திய கிறிஸ்தவர்களைப் பற்றி முழுக்க தெரியாமல் சிலர் *'கிறிஸ்தவத்தில் சாதி உண்டு; ஆனால் தீண்டாமை இல்லை'* என்று சொல்கிறார்கள். நாங்கள் 'நாடார்கள்'; எங்கள் கோயிலுக்குள் 'தலித் கிறிஸ்தவர்கள்' வரக்கூடாது என்று புறக்கணித்து இழிவுபடுத்துவது தீண்டாமையல்லவா!
பெரும்பான்மையான CSI, CNI, Lutheran, Catholic, Methodist, Adventist, Baptist, AG சபைகளின் ஊழியர்கள் இந்துத்துவ சாதி உணர்வு உடையவர்களாகத்தான் 'ஊழியம்' செய்கிறார்கள். அவர்களுடைய பெயர்களுக்குமுன் *"Reverend (பயப்படத்தக்க, ஆழமான மரியாதைக்குரிய)"* என்னும் பட்டப் பெயரை அவர்களே எழுதிக்கொள்கிறார்கள். அப்படி சொன்னால்தான் மக்கள் கொஞ்சமாவது மதிக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், சாதி உணர்வோடு வாழும் ஒருவருக்கு சமூக நலம் விரும்பிகளிடம் எப்படி ஆழமான மரியாதை கிடைக்கும்? அவரை ஒரு ஆன்மீக வழிகாட்டியாக, ஆத்மார்த்த முன்னோடியாக எப்படி மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்? இவர்கள் வெள்ளை அங்கி அணிவதால்மட்டும் எல்லாரும் இவர்களை *ஆன்மீக தலைவர்கள்* என்று நம்பிவிடுவார்களா?
சில ஊர்களில் ஒரே ஆலயத்தில் தலித்துகளுக்கும் மற்றவர்களுக்கும் வெவ்வேறு நேரங்களில் ஆராதனை நடக்கிறது. கிறிஸ்தவர்களுக்குள் சாதிப்பிரிவினைகள் இல்லையானால், தொழுகை நேரங்களில் ஏன் பாகுபாடு காட்டவேண்டும்?
தாழ்த்தப்பட்ட இறையியல் கல்வி மாணவர்கள் தங்கள் இறைப்பணிப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தபின்னும் அவர்கள் இறைப்பணியாளர்களாக நியமிக்கப்படுவதில்லை. மறை மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் பள்ளிகள், கல்லூரிகளில் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்த தாழ்த்தப்பட்டவர்கள் அந்த வேலைக்கு தகுதியுள்ளவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு மூப்பு முன்னுரிமை (Seniority) இருந்தாலும் வேலை நியமனங்களில் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றனர். "பேராயர் தன் சாதியை சார்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக கொடுக்கிறார்" என்று பாதிக்கப்பட்ட மக்கள் குமுறுகிறார்கள். ஆலய வளாகங்களில் கட்டி வாடகைக்கு விடப்பட்ட கடைகளை சாதி அடிப்படையில்தான் வாடகைக்கு விடுகிறார்கள். எடுத்துக்காட்டாக 'நாடார்கள்' தங்கள் சாதி இந்து நாடார்களுக்கு கொடுத்தாலும் 'தலித்' கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கமாட்டார்கள். கிறிஸ்தவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது அந்த திருமண்டலத்திலுள்ள ஆதிக்க சாதியினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சிலவேளைகளில் ஆலயத்துக்குள் சாதி அடிப்படையில் கைகலப்பு நடக்கிறது. சில நேரங்களில் அந்த சண்டை முற்றி நீதிமன்ற வழக்கில் முடிகிறது. கிறிஸ்தவ போதகர்களுக்கிடையேயான பிரச்சனைகளை மாற்று மத நம்பிக்கையுள்ள நீதிபதிகள் தீர்த்துவைக்கின்ற கேவலமான வேடிக்கையை சாதாரணமாக காணலாம். இதில் தன்மானமில்லாத போதகர்களுக்கு கொஞ்சம்கூட வெட்கமே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. கிறிஸ்தவர்களுக்குள் சாதிப்பிரிவினைகள் இல்லையானால், கிறிஸ்தவம் ஏன் இப்படி ஒரு கேவலமான நிலைமைக்கு தள்ளப்படவேண்டும்?
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கிறிஸ்தவ வாலிபர்கள் அவர்களைவிட வயதுக்குமூத்த 'தாழ்த்தப்பட்ட' கிறிஸ்தவ பெரியவர்களை மரியாதையே இல்லாமல் பெயர் சொல்லி அழைக்கும் சமூக கொடுமையை இன்றும் தமிழ்நாட்டில் காணமுடிகிறது.
"உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? அதுபோல தாழ்த்தப்பட்டவன் எவ்வளவு சம்பாதித்தாலும் உயர்சாதியாக முடியாது" என்று தாழ்த்தப்பட்டவர்களைப் பார்த்து சாதிவெறிக் கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள்.
தேர்தல் நேரங்களில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதியில், கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை கிறிஸ்தவராக மட்டும் பார்த்து நிறுத்துவதில்லை. பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் என்ன ஜாதியோ அந்த ஜாதிக்காரரே வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அதே தொகுதியில் வேற்றுஜாதியை சேர்ந்த ஒரு கிறிஸ்தவரையும், அவருக்கு எதிராக அந்த ஜாதியை சேர்ந்த இந்து வேட்பாளரையும் நிறுத்தினால், பரிதாபமாக கிறிஸ்தவ வேட்பாளர் கிறிஸ்தவர்களாலேயே தோற்கடிக்கப்படுகிறார். அவ்வளவுதூரம் கிறிஸ்தவர்கள் சாதிவெறி உடையவர்களாக இருக்கிறார்கள். இப்படியிருக்க, கிறிஸ்தவர்களுக்குள் சாதிப்பிரிவினைகள் இல்லை என்று பெருமை பேசுவது முழுப் பூசணிக்காயை தட்டுச்சோற்றுக்குள் மறைக்க முற்படுவது போன்றதல்லவா!
நாகர்கோயிலிலுள்ள ஒரு இந்து நண்பர, "சாதி வேறுபாட்டுக்கொள்கை இந்துத்துவ கொள்கை. அதை கிறிஸ்தவர்கள் பயன்படுத்தகூடாது; சாதி பெயர்களை பயன்படுத்தும் உரிமை கிறிஸ்தவர்களுக்கு கிடையாது" என்று சமூக ஊடகத்தில் தன் கருத்தை பதிவிட்டார். அதை வாசித்த கிறிஸ்தவ சாதி வெறியர்கள் அவரை கூப்பிட்டு கெட்ட வார்த்தைகளை பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
_சூத்திரனுக்கொரு நீதி, தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி, என்று சாத்திரம் சொல்லிடுமாயின்
அது சாத்திரமன்று சதியென்று கண்டோம்”_ என்றும்
_"சாதிகள் இல்லையடி பாப்பா; குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"_ என்றும் உயர்சாதி என்று சொல்லப்படும் *'பிராமண'* குடும்பத்தில் பிறந்த *சுப்பிரமணிய பாரதியார்* சொன்னார். உண்மையான கடவுளைப்பற்றி தெரியாமல் *'பத்திரகாளி'* என்னும் ஒரு விக்கிரகத்தை வணங்கிய, ஒரு இந்துத்துவ சிந்தனையாளர் சாதி ஏற்றத்தாழ்வு கொள்கையை *'பாவம்'* என்று குறிப்பிடுகிறார். இயேசுவை அறியாத *ஒளவை* பெருந்தகை 12-ம் நூற்றாண்டிலேயே, "சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால் நீதிவழுவா நெறிமுறையின் மேதினியில் இட்டார் பெரியார், இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி" என்று புரட்சி முழக்கமிட்டார். ஆனால், கிறிஸ்தவ பாதிரியார்களோ கிறிஸ்தவத்துக்கு சம்பந்தமே இல்லாத இந்துத்துவ சாதிவெறியோடு அலைகிறார்கள். கிறிஸ்தவர்களின் இந்த பிற்போக்குத்தனம் இந்த நாட்டிலுள்ள எல்லா கிறிஸ்தவ எதிர்ப்பாளர்களுக்கும் தெரியும் என்பதே கேவலமான உண்மை.
கிறிஸ்தவர்கள் பலர் தங்கள் பெயருக்குப்பின் இந்துத்துவ சாதியின் பெயரை எழுதுகிறார்கள். *மோசஸ் நாடார், ராபர்ட் தேவர், அந்தோணி முதலியார், சேவியர் செட்டியார்* என்று கூச்சமில்லாமல் குறிப்பிடுகிறார்கள். பல கிறிஸ்தவர்களின் கல்லறைகளில்கூட புதைக்கப்பட்டவரின் சாதி பெயரும் சேர்த்தே பொறிக்கப்பட்டுள்ளது. உயிரோடிருப்பவரை மட்டுமல்ல இறந்தவரையும் இந்த சாதிப்பிசாசு விட்டுவைக்கவில்லையே!
சில ஊர்களில் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு தனி கல்லறைத் தோட்டமும், பிறருக்கு தனி கல்லறைத் தோட்டமும் 'அருட்பணியாளர்கள்' என்று அழைக்கப்படுபவர்களால் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்களுக்குள் சாதிப்பிரிவினைகள் இல்லையானால், ஏன் கல்லறைகள் சாதி அடிப்படையில் பிரிந்துகிடக்கவேண்டும்? இந்த கொடுமையான கோமாளித்தனத்துக்கு பொதுநிலையினரை மட்டும் குறை சொல்வதில் பயனில்லை. பல்லாண்டுகள் இறையியல் படித்த பாதிரிகள்தான் பொறுப்பேற்கவேண்டும். அவர்களால் திருச்சபையோரை கட்டுப்படுத்தமுடியாவிட்டால் தங்களை *'பயபக்திக்குரிய போதகர்கள்'* என்று அவர்கள் *தங்களை தாங்களே* அழைத்துக்கொள்வதில் அர்த்தமில்லை.
இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் ஊழியக்காரர்களே தங்கள் பெயருக்குப் பின் சாதிப் பெயரை எழுதுகிறார்கள். இது இந்தியாவில் மட்டுமல்ல; இந்திய கிறிஸ்தவர்கள் எந்தெந்த நாடுகளில் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இந்த மனநோய் பரவியிருக்கிறது.
சில கிறிஸ்தவர்கள் சாதி உணர்வு இல்லாத கண்ணியவான்களைப் போல பிற கிறிஸ்தவர்களிடம் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சாதிப் பேய்க்கு அடிமையானவர்கள் என்பதை சில சந்தர்ப்பங்கள் அப்பட்டமாக காட்டிக்கொடுத்துவிடுகின்றன.
கிறிஸ்தவர்கள் *கிறிஸ்தவ நாடார் சங்கம், கிறிஸ்தவ முதலியார் முன்னேற்ற சங்கம், கிறிஸ்தவ பறையர் பேரவை, கிறிஸ்தவ வெள்ளாளர் பேரவை, தலித் கிறிஸ்தவ பேரவை, கிறிஸ்தவ வன்னியர் நல சங்கம்* என்று சாதி சங்கங்களை தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் 'இரட்சிக்கப்பட்டேன்' என்று சொல்லிக்கொள்பவர்கள்தான் அந்த சங்கங்களில் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். எதிலிருந்து இரட்சிக்கப்பட்டார்களோ தெரியவில்லை. கிறிஸ்தவத்தின் நிலை எவ்வளவு அசிங்கமாக இருக்கிறது பாருங்கள்!
கிறிஸ்தவர்களுக்குள் சாதிப்பிரிவினைகள் இல்லையானால், ஏன் கிறிஸ்தவர்கள் சாதி சங்கங்களை தொடங்கி நடத்தவேண்டும்?
விழுப்புரம் மாவட்டம் இறையூர் என்னும் கிராமத்திலுள்ள கத்தோலிக்க சபையில் நடந்த சாதிச் சண்டையில் காவல் துறையினர் துப்பாக்கிசூடு நடத்தி பலர் உயிர் இழந்துள்ளனர். அவர்கள் இயேசுவுக்காக தங்கள் உயிரைக் கொடுக்கவில்லை. நற்செய்தி அறிவித்ததற்காக கொலை செய்யப்பட்ட இரத்த சாட்சிகளல்ல அவர்கள். அசிங்கமான இந்துத்துவ சாதிக்காக தங்கள் உயிரைக் கொடுத்த துர்பாக்கியசாலிகள். *'தாழ்த்தப்பட்டோர்' என்று தங்களை அழைத்துக்கொள்வோரின் பிணத்தை 'வன்னியர்' என்று தங்களை அழைத்துக்கொள்வோருடைய வீதி வழியாக கொண்டுபோகக்கூடாது; தேர்பவனி தாழ்த்தப்பட்டவர்களின் தெருவில் போகக்கூடாது* என்று தடைவிதிக்கும் அளவுக்கு உச்சக்கட்ட சாதிவெறி உடையவர்களாக கிறிஸ்தவர்கள் அந்த ஊரில் இருக்கிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த தச்சூர் என்னும் கிராமத்திலுள்ள கத்தோலிக்க சபையிலுள்ள 'தலித்துகள்' என்று தங்களை அழைத்துக்கொள்வோர் இறந்தால் அவர்களை புதைப்பதற்கு மயானபூமி, 'நாயுடு' என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஆதிக்கசாதியினரால் மறுக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து குரல் கொடுத்த 'தாழ்த்தப்பட்டவர்' என்று தன்னை அழைத்துக்கொள்ளும் *இராஜேந்திரன்* என்பவர் ஆதிக்க சாதி கிறிஸ்தவர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். கிறிஸ்தவர்களாகிய நாம் *இந்துத்துவ ஜாதிப்பேயிடம் விலைபோனவர்கள்* என்னும் அசிங்கமான உண்மை உலகுக்கே தெரிந்துவிட்டது.
கத்தோலிக்க பாதிரியார்கள் பல்லாண்டுகள் மறைக்கல்விப் பள்ளியில் (Seminary) கற்றுத்தேறித்தான் 'பாதிரியார்' பட்டத்தை பெறுகிறார்கள். அவர்களுடைய ஆன்மீக பணிக்கு குடும்ப உறவு தடையில்லாமல் இருப்பதற்காக இல்வாழ்க்கையை துறந்து, திருமணம் செய்யாமல் இந்த பொறுப்புக்கு வருகிறார்கள். ஆனால், பெரும்பான்மையான பாதிரியார்கள் இந்த சாதிப்பிசாசிடமிருந்து விடுதலை இல்லாமலேயே காலம் தள்ளுகிறார்கள். அவர்களது வெளிப்புறம் வெண்மையான அங்கியால் போர்த்தப்பட்டிருந்தாலும் உள்ளே சாதி அழுக்கோடுதான் 'அருட்பணி' செய்கிறார்கள். இயேசு கிறிஸ்து மனித அவதாரமாக பிறந்ததன் சாராம்சத்தையே கிறிஸ்தவர்கள் நாம் தொலைத்துவிட்டோமே! சாதியத்துக்கு எதிராக போதிக்கும் துணிவு இல்லாத போதகர்கள் தங்கள் போதக வேலையை விட்டுவிடுவதே சாலச்சிறந்தது. ஏனெனில் மறைநூலில் எழுதியுள்ளவாறு *கிறிஸ்தவர்களால் கடவுளின் பெயர் பிற இனத்தாரிடையே இகழப்படுகின்றதே!(உரோமையர் 2:24)*
தனக்கு தனது சாதியில் வரன் கிடைக்காததால் திருமணமே ஆகாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் பல பெண்களின் பெற்றோர் *'பூரண பெந்தெகோஸ்தே'* பாஸ்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகர்கோயிலில் ஒரு பாஸ்டருக்கு அவருடைய சாதியில் பெண் கிடைக்காததால், எனக்குத் தெரிந்து அவரது 42 வயது வரை அவருக்கு பெண் தேடிக்கொண்டிருந்தார். இது எவ்வளவு அவமானமாக இருக்கிறது!
2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கேரளாவில் வெள்ளம் வந்தபோது ஆயிரக்கணக்கான மக்களுடைய வீடுகள் பாதிக்கப்பட்டபோது மக்கள் தங்கள் வீடுகளில் தங்கமுடியாததால் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது ஒரு முகாமில் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்ததால் சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்களோடு தங்க மறுத்துவிட்டனர். இந்த கேவலமான மனநோயை குணமாக்காமலேயே விட்டுவிடமுடியாது.
_"நீ சாதிமாறி திருமணம் செய்தால் நான் தற்கொலை செய்து செத்துவிடுவேன்"_ என்று மிரட்டும் பெற்றோர் கிறிஸ்தவர்களில் தாராளமுண்டு. சில கிறிஸ்தவர்கள் தங்கள் சாதியில் பெண் கிடைக்கவேண்டுமென்று உபவாச ஜெபம் செய்கிறார்கள். அவர்களது ஆன்மீக முதிர்ச்சியைப் பார்த்தீர்களா?
சாதி என்னும் விஷத்தை உள்ளே வைத்துக்கொண்டே, நகைகளை கழட்டி வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துக்கொண்டு, வெள்ளை நிற ஆடை அணிந்துவிடுவதால் பிறர் நம்மை *புனிதமானவர்கள்* என்று நம்பிவிடுவார்கள் என்று நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், சாதி விஷயத்தில் நாம் *சாயத்தொட்டிக்குள் விழுந்த நரி* போல் அல்லவா வாழ்கிறோம்! இப்படிப்பட்ட வேடதாரிகளைப் பற்றி ஆண்டவர் கூறுகிறார், _*"குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால், ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள். "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால், அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருட்களாலும், தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது, அதன் வெளிப்புறமும் தூய்மையாகும். வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லாவகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால், உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள். (மத்தேயு 23:24-28)*_
நான் பிறந்து வளர்ந்த குமரி மாவட்டம், தமிழ்நாட்டிலேயே கல்வியறிவு உடைய மக்கள் அதிக சதவீதம் வாழும் மாவட்டம். ஆனால், ஏறத்தாழ எல்லா படிப்பறிவுடைய பாஸ்டர்களும் இந்துத்துவ சாதி பார்த்துதான் திருமணம் செய்கிறார்கள். பலமணி நேரம் அந்நிய பாஷையில் 'முழங்கால் யுத்தம்' செய்யும் ஜெபவீரர்களும், ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதற்காக அற்புதப் பெருவிழாக்களில் பேசும் விசேஷ வரம் பெற்ற பராக்கிரமசாலிகளும், 'ஆவிக்குரிய வைராக்கிய வாஞ்சையுடைய பெந்தேகோஸ்தே அனுபவசாலிகளும்'கூட இந்துத்துவ சாதி என்னும் மனநோயால் பீடிக்கப்பட்டுதான் கிடக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.
ஒருமுறை திருநெல்வேலியில் *நாடார்* என்னும் சாதி உணர்வால் பீடிக்கப்பட்ட ஒரு 'சுவிசேஷ ஊழியர்' என்னுடன் பேசும்போது, _"சென்னை பேராயத்தில் இதுவரை ஒருமுறைகூட நாடார் ஜாதியை சார்ந்தவர்கள் பேராயர் பதவிக்கு வந்ததில்லை. சென்னை கிறிஸ்தவர்களின் சாதிவெறியை பார்த்தீர்களா அண்ணே?"_ என்றார். உடனே நான், _"அந்த பதவிக்கு வருபவர்களை *ஊழியக்காரர்களாக* பார்க்காமல் சாதி அடிப்படையில் பாகுபடுத்தியே பார்க்கிறீர்களே! அப்படிப் பார்த்தால் திருநெல்வேலி பேராயத்தில் ஒருமுறையாவது ஒரு தலித் பேராயராக பதவி ஏற்றிருக்கிறாரா?"_ என்று கேட்டேன். இயேசுவின் இரட்சிப்பை பிறருக்கு நற்செய்தியாக அறிவிக்கும் ஒரு 'ஊழியருக்குள்' இருக்கும் சாதி உணர்வைப் பாருங்கள்!பூமியிலே சாதி வெறியிலிருந்து மனம் திருந்தும் ஊழியர்களின் பொருட்டு பரலோக இராஜ்ஜியத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று நினைக்கிறேன்.
இந்துத்துவாவால் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களில் ஒரு சாதியார் மற்ற சாதியாரை ஏற்றுக்கொள்வதில்லை என்பது கொடுமையிலும் பெரிய கொடுமை. எடுத்துக்காட்டாக, *பள்ளர்கள்* என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் *பறையர்கள்* என்று தங்களை அழைத்துக்கொள்பவர்களை திருமணம் செய்வதில்லை. *பறையர்கள்* என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் *அருந்ததியர்கள்* என்று தங்களை அழைத்துக்கொள்பவர்களை திருமணம் செய்வதில்லை.
ஒருமுறை "ஆதி திராவிடர்" என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஒருவர் என்னிடம், _"அண்ணா, நாடார்கள் சாதிவெறி உடையவர்கள்; என் மகனுக்கு ஒரு நாடாரிடம் போய் பெண் கேட்டால் தரமுடியாது என்று சொல்லிவிட்டார்"_ என்றார். உடனே நான், _"அவருக்கு சாதியத்தின் வரலாறு தெரியாது. 'சாதியம் தவறு' என்ற இறைவார்த்தைகள், விளக்கங்கள் தெரியாததால் அவர் சாதி உணர்வோடு இருக்கிறார். அவரை விடுங்கள். நீங்கள் சாதி உணர்வு அற்றவர்தானே! உங்கள் மகளை 'அருந்ததியர்' என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஒரு கிறிஸ்தவருக்கு கொடுக்கமுடியுமா?"_ என்று கேட்டேன். உடனே அவர், _"அருந்ததியர்களுக்கு என் மகளை எப்படி கொடுக்கமுடியும்?"_ என்றார். உடனே நான், _*"ஒருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார் (கலாத்தியர் 6:7)._* நீங்கள் 'அருந்ததியரிடம்' விதைக்கும் வெறுப்பை 'நாடாரிடம்' அறுவடை செய்தீர்கள், *_பிறர் உங்களுக்கு என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே நீங்கள் பிறருக்கு செய்யுங்கள்" (மத்தேயு 7:12)_* என்று இயேசுநாதர் தெளிவாக்கியிருக்கிறார். பிறர் உங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்பும் நீங்கள் பிறரை ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லவா! அதுதானே நியாயம்! நீங்கள் யாரையும் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள்; எல்லாரும் உங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது அநியாயமல்லவா! சட்டம் எல்லாருக்கும் பொதுவானதல்லவா! _*இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். மத்தேயு 5:7)*_
" என்றேன்.
அருந்ததியர்கள் கொடிய சாதி கொடுமைகளை தங்கள் இந்துத்துவ மதத்தில் அனுபவித்தாலும், அவர்கள் கிறிஸ்தவத்துக்கு வராததும், வந்த சிலர் திரும்ப இந்துத்துவத்துக்கே போனதும் இந்த சாதிவெறிக் கிறிஸ்தவர்களின் புறக்கணிப்பால்தான் என்பது காலம் நமக்கு கற்றுக்கொடுத்திருக்கும் கசப்பான பாடம்.
அண்மையில் முனிசெல்வம் என்ற ஒரு அருமையான சகோதரனிடம் தொலைபேசியில் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. செங்கல்பட்டில் வாழும் அவர் ஒரு வழக்கறிஞராக பணியாற்றுகிறார். *தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி* என்ற இயக்கத்தில் தீவிரமாக செயலாற்றுகிறார். அவரிடம் நான் பேசும்பொழுது, _"சகோதரரே, தீண்டாமை ஒழிக்க முனைப்பாக இருக்கும் நீங்கள், தீண்டாமையை கற்பித்து, நடைமுறைப்படுத்தும் இந்துத்துவாவில் ஏன் இன்னும் இருக்கிறீர்கள்?"_ என்று கேட்டேன். உடனே அவர் மிகவும் மனத்தாழ்மையான குரலில், _"ஐயா, நான் கிறிஸ்தவத்திற்கு வந்தால், மற்ற கிறிஸ்தவர்கள் என்னை கிறிஸ்தவ தலித்தாகத்தான் கருதுவார்கள். எத்தனை நூற்றாண்டுகளானாலும் தாழ்த்தப்பட்டவன் என்ற பதவி என்னைவிட்டு அகலப்போவதில்லை. மேல்சாதி கிறிஸ்தவர்களால் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் படும் பாடுகள் எங்கள் அமைப்புக்கு நன்றாக தெரியுமே ஐயா! மதமாற்றத்தால் எனக்குள் என்ன மாற்றம் உருவாகப் போகிறது? அதனால் தான் இந்துவாகவே தொடர்கிறேன்"_ என்றார். மனதிற்கு மிகுந்த வலி கொடுத்த இந்த உரையாடல், என் உயிருள்ளவரை நினைவில் இருக்கும் அளவிற்கு ஆழமாக என் மனதில் பதிந்துவிட்டது. கிறிஸ்தவத்தை வெளியே இருப்போர் எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா சகோதரங்களே! _'உப்பில்லா பண்டம் குப்பையிலே'_ என்று நம் மூதாதையர்கள் சொன்னது எவ்வளவு உண்மையாக இருக்கிறது!
காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் இருக்கும்போது பைபிளை கருத்தூன்றி வாசித்ததில் இயேசு கிறிஸ்துவின் மலைப்பொழிவு அவரை மிகவும் கவர்ந்துள்ளது. இயேசு கிறிஸ்துவின் கொள்கையால் கவரப்பட்ட காந்தி ஒருநாள் வெள்ளையர்களுக்கென்று நியமிக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ ஆலயத்தில் நுழைய முற்பட்டபோது, வெள்ளையர்கள் தங்கள் இனவெறியால் காந்தியை ஈவு இரக்கமின்றி ஆலயத்திலிருந்து வெளியே துரத்திவிட்டார்கள்.
அதே நாட்டில் ஒருமுறை இரயிலில் பயணம் செய்ய காந்தி முயற்சி செய்தபோது, அந்த பெட்டி வெள்ளையர்களுக்கென்று நியமிக்கப்பட்டிருந்ததால், வெள்ளையர்கள் தங்கள் இனவெறியால் காந்தியின் உடைமைகளையும், காந்தியையும் வெளியேற்றிவிட்டார்கள். இதுதான் இயேசுபெருமான் கிறிஸ்தவர்களுக்கு கற்றுக்கொடுத்த பண்பாடா என்று காந்தி அன்று மனம் நொந்திருப்பார் அல்லவா!
ஒருமுறை இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு ஆன்மீகப்பணியாளர் ஸ்டேன்லி ஜோன்ஸ் என்பவர் காந்தியிடம், _"காந்தியாரே, நீங்கள் உங்கள் பேச்சில் அடிக்கடி இயேசு கிறிஸ்துவின் போதனைகளை மேற்கோள் காட்டுகிறீர்கள்; ஆனால், ஏன் நீங்கள் இன்னும் கிறிஸ்தவராக மாறவில்லை?"_ என்று கேட்டார். அதற்கு காந்தி, _"நான் உங்கள் கிறிஸ்துவை விரும்புகிறேன்; ஆனால், கிறிஸ்தவர்களை விரும்பமுடியவில்லை; ஏனெனில், கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவைப்போல இல்லை"_ என்றாராம். இப்படி கிறிஸ்தவர்கள் வரலாறு நெடுக தங்கள் இனவெறி, சாதிவெறியை வெளிப்படுத்தி கடவுளை கேவலப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆப்பிரிக்காவில் ஒரு நீக்ரோ மனிதர் கிறிஸ்துவின் மீட்பை ஏற்றுக்கொண்டார். கடவுளை வணங்க விரும்பி அருகிலிருந்த வெள்ளையர்களின் கோவிலுக்கு சென்றார். _"நீயெல்லாம் இங்கே வரக்கூடாது"_ என்று வெள்ளையர்கள் அவரை துரத்திவிட்டனர். அவர் வாசலுக்குமுன் நின்று தொழுகையை கவனித்துக் கொண்டிருந்தார். இதை கவனித்த பக்தர்கள் உடனே வாசலை மூடிவிட்டனர். உடனே இவர் சன்னல் வழியாக எட்டிப்பார்த்து நின்றார். உடனே சன்னலையும் அடைத்துவிட்டனர். அந்த நீக்ரோ மனிதர் கோவிலைச் சுற்றி சுற்றி வந்து, _"இயேசுவே, கோவிலின் கதவை திறந்தருளும்"_ என்று வேண்டினார். அவர் இப்படி கோவிலை சுற்றி வரும்போது அவருக்கு எதிர் திசையில் வேறொருவர் கோவிலைச் சுற்றி வருவதைக் கண்டார். அவர் இந்த மனிதனைப் பார்த்து, _"நீ ஏனப்பா கோவிலைச் சுற்றி வருகிறாய்?"_ என்று கேட்டார். அதற்கு நீக்ரோ மனிதன், _"ஐயா! நான் மீட்கப்பட்டதனால் கடவுளை வணங்க விரும்பி இந்த கோவிலுக்கு வந்தேன். நான் கறுப்பாக இருப்பதால் யாரும் என்னை உள்ளே விடவில்லை; கதவுகளையும் அடைத்து விட்டனர். அரை மணி நேரமாக கோவிலின் உள்ளே நுழைவதற்கு நான் போராடிக் கொண்டிருக்கிறேன்"_ என்றார். அந்த மனிதர் சொன்னார், _"நீ அரை மணி நேரமாகத்தான் போராடிக்கொண்டிருக்கிறாய். நான் 18 வருடங்களாக உள்ளே செல்லமுடியாமல் போராடிக்கொண்டிருக்கிறேன். என்னையே அவர்கள் உள்ளே விடவில்லை. நீ கறுப்பாகவும் இருந்தாலும் உன் உள்ளம் வெள்ளையாக இருக்கிறது. அவர்கள் தோல்தான் வெள்ளை. ஆனால், அவர்கள் உள்ளம் கறுப்பாக. இருக்கிறது"_ என்றார். ஆச்சரியப்பட்ட நீக்ரோ மனிதர், _"ஐயா! நீங்கள் யார்?"_ என்று கேட்டான். அவர் சொன்னார் _"நான் இயேசு கிறிஸ்து!"_ என்றார்.
"பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் *அன்பு, பாசம், தயவு, இரக்கம், சகோதரத்துவம், சமத்துவம்* என்பவற்றைப் பற்றி மேடையில் வாய்கிழிய பேசுவார்களேதவிர, நிஜவாழ்வில் கீரியும் பாம்பும் சண்டையிடுவதைப்போல பிரிவினைவாதிகளாக, ஜாதிவெறியோடு பிரிந்துகிடக்கும் வேடதாரிகள்தான்" என்று பிறர் நம் உண்மை நிலையை சமூக வலைதளங்களில் படம்பிடித்து காட்டுகிறார்கள்.
இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு இறைப்பணி செய்யவந்த இராபர்ட் டி நோபிளி என்ற பாதிரியார், பிராமணர்களை கிறிஸ்தவத்துக்கு இழுக்க _'சாதியம் தவறு அல்ல'_ என்று போதித்து, ஆலயத்திற்குள் சாதி அடிப்படையில் மக்கள் உட்காரும் இடங்களை நிர்ணயித்தார். அதற்கென்று பிரிவுக் கைப்பிடிச்சுவர்களை எழுப்பினார். ஆதிக்க சாதியினர் உட்காரும் இடத்தைவிட தாழ்த்தப்பட்டவர் உட்காரும் இடம் சற்று தாழ்வாக அமைக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட வர் சமைத்த உணவை உண்ணாமல், பிராமணர்கள் சமைத்த உணவையே அவர் உண்டார். 'எப்படியாவது கொஞ்சம்பேரை மதமாற்றம் செய்துவிடவேண்டும்' என்ற இழிவான ஆசையால்தானே இப்படி நடந்துள்ளது!
சிலர் தங்களிடம் சாதிப் பாகுபாடுகளே இல்லை என்று சொல்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் ஆதாரம் என்னவென்றால், _"நான் வேலை செய்யும் இடத்தில் எல்லா சாதியினரிடமும் சகஜமாக பழகுகிறேன்; பேருந்தில் பயணம் செய்யும்போது சாதி பார்க்காமல் அமர்கிறேன்; வங்கியில் பணம் எடுக்க, ரேஷன் கடையில் பொருட்களை வாங்க வரிசையில் நிற்கும்போது நான் சாதி பார்ப்பதில்லை; ஆனால், திருமணத்தில் மட்டும்தான் சாதி பார்ப்பேன்"_ என்கிறார்கள். அப்படிப் பார்த்தால், இந்துக்களிலும் பெரும்பான்மையானோர் இன்று அப்படித்தான் இருக்கிறார்கள். சினிமா தியேட்டர்களில், பொது மக்கள் கூடும் பொது இடங்களில், போக்குவரத்து வாகனங்களில், மதுபான கூடங்களில் எங்குமே இந்துக்கள் சாதி பார்ப்பதில்லையே! திருமணத்தில் மட்டும்தானே சாதி பார்க்கிறார்கள். இந்த விஷயத்தில் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
இப்படிப்பட்டவர்களைப் பற்றித்தான் ஆண்டவர், *_"வாய்ச் சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகின்றனர்; உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலையில் இருக்கிறது; இவர்களது இறையச்சம் மனனம் செய்த வெறும் மனித கட்டளையைச் சார்ந்ததே! (எசாயா 29:13)"_* என்கிறார்.
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விடுதலையைத் தேடி கிறிஸ்தவத்துக்கு வருவதுபோல, சாதியால் பாதிக்கப்பட்டவர்கள் சமத்துவத்தைத்தேடி இயேசுவிடம் வந்திருந்தால், _"மருத்துவர்களால் கைவிடப்பட்ட என்னை இயேசு கிறிஸ்து குணமாக்கினார்"_ என்று பலர் சாட்சியம் சொல்வதுபோல, "நான் சாதிவெறி உடையவனாக இருந்தேன்; இயேசு என்னை சாதிவெறியிலிருந்து விடுவித்தார், தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுவித்தார்"* என்று பலர் சாட்சியம் சொல்லியிருப்பார்கள். அது எவ்வளவு மேன்மையாக இருந்திருக்கும்!
இந்துக்கள் கடைபிடிக்கவேண்டிய இந்த கடைந்தெடுத்த சாதி மூடநம்பிக்கையை கிறிஸ்தவர்கள் நாம் அன்பு பற்றாக்குறையால் கடைபிடித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற நாம் எதிர்பார்ப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நம் மதத்தை எப்படியாவது வளர்த்துவிடவேண்டும் என்ற மதவெறி அல்லவா இது! நாமே அனுபவிக்காத ஆன்மீக விடுதலையை பிறருக்கு வாக்குறுதியளிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இதெல்லாம் நமது சுயபெருமைக்காக அல்லவா கடைபிடிக்கிறோம்! இது நமக்காக உயிரை தந்த கடவுளுக்கு நாம் செய்யும் பச்சை துரோகமல்லவா?
அண்மையில் குமரி மாவட்டத்தில், சில கிறிஸ்தவர்கள் வெள்ளை உடை உடுத்தி ஒரு கிராமத்துக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அதை கண்ட அந்த ஊர் இந்து இளைஞர்கள் இவர்களை தடைசெய்து, கெட்ட வார்த்தையால் திட்டி, இவர்களுடைய நெற்றியில் திருநீறுபூசி அனுப்பியிருக்கிறார்கள். சாதிவெறி என்று வரும்போது இந்துக்களைவிட அணு அளவுகூட வித்தியாசம் இல்லாமல் வாழும் கிறிஸ்தவ வேடதாரிகளுக்கு பட்டை போட்டுவிட்டதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் வெள்ளையடிக்கப்பட் கல்லறைதானே! சாதி வெறிபிடித்த ஓநாய்களுக்கு பரிசுத்தவான்களின் வேடம் எதற்கு?
இந்துத்துவ சிறைச்சாலையில் அவ்வளவுதூரம் அவமானப்படுத்தப்பட்டாலும் இந்துக்கள் கருணாமூர்த்தி இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாத காரணம் என்ன என்பதை நாம் சிந்திக்கவேண்டும்.
எந்த மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவர்கள் அதிகமாக சாதிவெறி உடையவர்களாக இருக்கிறர்களோ அந்த மாவட்டத்திலுள்ள *தலித் இந்துக்களே* கிறிஸ்தவர்களின் மதமாற்றத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள். இது எனது ஆய்வின் முடிவு.
அமெரிக்காவில் எங்கோ அமர்ந்திருக்கும் ஒருவர், இந்தியாவில் ஒரு கிராமத்திலிருக்கும் நம் கையிலுள்ள ஆண்ட்ராய்டு அலைபேசியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது போல, இந்துத்துவ கொள்கையாகிய சாதி என்ற வைரசை கிறிஸ்தவர்களின் மனதில் நிறுவி கிறிஸ்தவர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் வெளியே இருக்கும் சங்கராச்சாரியார். கிறிஸ்தவத்தின் பரிதாபமான நிலையைப் பாருங்கள். இந்துத்துவ சாதியம் என்னும் காண்டாமிருகத்திடமிருந்து தப்பி ஓடும்போது, கிறிஸ்தவ சாதியம் என்னும் சிறுத்தைப் புலியிடம் சிக்கிக்கொண்டதைப் போன்று இன்று பலர் உணர்கிறார்கள்.
( *'அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்க முடியுமா?'* என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரை ).

Comments
Post a Comment